தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களைத் தவிர்த்து மாநிலம் முழுவதும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகள் அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், 2-ம் வகைகளில் அமைப்பெற்றுள்ள பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. உதாரணமாக, கடந்த 24 மணிநேரத்தில் கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பலூர், புதுக்கோட்டை, நீலகிரி, மதுரை (டெல்டா பிளஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது), கரூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது.
அதேபோன்று, கடந்த ஜூன் 30-ஆம் தேதி கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நீலகிரி, பெரம்பலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், தூத்துக்குடி, விழுப்புரம், விருதுநகர், திண்டுக்கல் ஆகிய 14 மாவட்டங்களில் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை அதற்கு முந்தைய நாளை (ஜூன் 29-ஆம் தேதி) விட சற்று கூடுதலாகி இருந்தது .
தொற்று அதிகரிக்கும் மாவட்டங்கள் அடுத்தடுத்து இருப்பதால் மாவட்டங்களுக்கு இடையே பொதுப் போக்குவரத்து இயக்கப்படுவதும் முக்கிய காரணமாக இருக்கலாம். உதாரணமாக, அடுத்தடுத்து இருக்கும் ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது கவலையளிக்கக் கூடியாதாக உள்ளது.
கடந்தாண்டு பெருந்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது போக்குவரத்து இயக்கப்பட்டது. ஓவ்வொரு மண்டலத்திலும் முதற்கட்டமாக 50 விழுக்காடு பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டன. உதாரணமாக,மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கிய 5 வது மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் முதற்கட்டமாக வெறும் 450 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அவற்றில் 60 விழுக்காடு பயணிகள் ஏற்றி செல்லவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், தற்போது, அந்தந்த மாவட்டத்தில் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து சேவைகள் இயக்கப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் முதற்கட்டமாக புறநகர் பேருந்துகள் 150 -ம், நகர் பேருந்துகள் 139-ஆம் (மொத்த 289) இயக்கப்பட்டு வருவதாக அமமாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பேருந்து இயக்கத்தின் போது 50 சதவீத பயணிகளை அனுமதித்தல், முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட கோவிட் பாதுகாப்பு வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, வடதமிழகத்தில் அடுத்தடுத்து இருக்கும் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், மாவட்டங்களில் டெல்டா வகை பிளஸ் கொரோனா தொற்று கண்டரியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு இடையே உள்ள அனைத்து வழித்தடங்களிலும் போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே, ஜூன் 28-ஆம் தேதி முதல் 27 மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் இயக்க அனுமதி அளித்தற்கும், கொரோனா புதிய பாதிப்புகளுக்கும் நேரடி தொடர்பு இருக்குமோ என்ற கேள்வியும் தற்போது எழுந்ததுள்ளது.