இந்தியாவில் நேற்று முன்தினம் மட்டும் ஒரேநாளில் 2.73 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு புதிய தடுப்பூசி கொள்கையை வெளியிட்டது. மக்களிடையே அதிகமாகத் தடுப்பூசிகளைக் கொண்டுசெல்லும் நோக்கத்துடன் இந்தக் கொள்கை வரைவு செய்யப்பட்டிருந்தாலும் மற்றோரு பக்கம் இந்தியாவின் சில மாநிலங்கள் அதிக எண்ணிக்கையில் கொரோனா தடுப்பூசிகளை வீணடித்திருப்பதாக ஆர்.டி.ஐ. மூலமாகக் கிடைத்த தகவலில் தெரியவந்திருக்கிறது.
கடந்த 11 ஏப்ரல் வரையில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட 10 கோடி தடுப்பூசிகளில் 44 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளன.
அதிர்ச்சிகரமாக தடுப்பூசியை அதிகம் வீணடித்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. தடுப்பூசி பற்றாக்குறை குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில் இந்த ஆர்.டி.ஐ தகவல் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஆர்.டி.ஐ. தகவலின்படி அதிகபட்சமாக தமிழ்நாடு தனது தடுப்பூசிகளில் 12 சதவிகிதத்தை வீணடித்துள்ளது. அடுத்து ஹரியானா 9.74 சதவிகிதமும் பஞ்சாப் 8.12 சதவிகிதமும் மணிப்பூர் 7.8 சதவிகிதமும் தெலங்கானா 7.55 சதவிகிதமும் தடுப்பூசிகளை வீணடித்துள்ளன.
ஒட்டுமொத்தமாக கடந்த 11 ஏப்ரல் வரையில் மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட 10 கோடி தடுப்பூசிகளில் 44 லட்சம் வீணடிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கிலான தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆர்.டி.ஐ. தகவலில் பதிவு செய்யப்படவில்லை. கேரளா, மேற்கு வங்காளம், ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இந்தப்பட்டியலில் கடைசி இடங்களில் இருக்கின்றன.
ஒருபக்கம் தடுப்பூசிகள் இப்படி வீணடிக்கப்படும் நிலையில் மற்றொரு பக்கம் அறிவிக்கப்படாத தடுப்பூசி தட்டுப்பாடும் நாடுதழுவிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. இதற்குத் தீர்வுகாண புதிய தடுப்பூசி கொள்கையின்படி தடுப்பூசி நிறுவனங்களின் மாதாந்திர உற்பத்தியில் பாதி சதவிகிதத்தை மத்திய அரசுக்கு நேரடிக் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர நிர்ணயிக்கப்பட்ட விலையில் திறந்தவெளிச் சந்தையிலும் தடுப்பூசியை விற்கும் அதிகாரத்தைத் தனியார் தடுப்பூசி நிறுவனங்களுக்கு அரசு வழங்கியிருக்கிறது.
மேலும் தடுப்பூசி நிறுவனங்களிடமிருந்து மாநிலங்களும் தனியார் மருத்துவமனைகளும் நேரடியாக தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்துகொள்ளலாம் எனவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலும் வருகின்ற செப்டம்பர் மாதத்துக்குள் கோவாக்ஸின் தடுப்பூசி உற்பத்தி பத்து மடங்காக அதிகரிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் அண்மையில் தெரிவித்திருந்தார்.
மே மாதம் தொடங்கி 18-45 வரையிலான நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில் தடுப்பூசி தாராளமயமாக்கலுக்கும் அதன் உற்பத்தியை அதிகரிக்கவும் தடுப்பூசி நிறுவனங்களுக்கு அண்மையில் அரசு கூடுதலாக 4500 கோடி ரூபாய் நிதி வழங்கியிருக்கிறது. இதன்படி கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்துக்கு ரூ.3000 கோடியும் கோவாக்ஸின் தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு ரூ.1500 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளன. உற்பத்தியை அதிகரிப்பது தடுப்பூசிகள் வீணடிப்புக்கு விடையாக அமையுமா என்பதை பொருத்திருந்து பார்க்கவேண்டும்.