நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவரும் சூழலில், தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு தினசரி 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையை கடந்து வருகிறது. கடந்த மார்ச் மாத இறுதி முதல் கொரோனா பாதிப்பு அதிகரித்துவந்ததை தொடர்ந்து, தமிழகத்தில் பேருந்துகளில் நின்று பயணிக்க தடை, திருவிழா மற்றும் மதக்கூட்டங்கள் நடத்த தடை என்று கட்டுப்பாடுகளை விதித்தது.


இருப்பினும் கொரோனா பரவல் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் அதிகரித்து வந்ததால் தமிழகத்திலும் ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவுசெய்தது. கடந்தமுறை போல முழுநேர ஊரடங்கை அமல்படுத்தினால், பொதுமக்களின் வாழ்வாதாரம் மிக கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் இந்த முறை இரவு நேர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.


இதன்படி, இன்று இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை வரும் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதுதவிர, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இரவு நேர போக்குவரத்து சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.




இதனால், பொதுமக்கள் வெளியூர் மற்றும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக அதிகாலை 4 மணிமுதல் பேருந்து சேவைகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் அரசுப் பேருந்துகள் அதிகாலை 4 மணிமுதல் இயக்கப்பட உள்ளது. மதுரை, நெல்லை., நாகர்கோவில், திருவனந்தபுரம், கன்னியாகுமரி ஆகிய தொலைதூர பேருந்துகள் காலை 4 மணிமுதல் காலை 9 மணிவரை மட்டும் இயங்க உள்ளது.


இந்நிலையில், வெளியூர்களுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் இயங்குமா? அல்லது இயங்காதா? என்ற குழப்பம் மக்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், தமிழகத்தில் கொரோனா பிரச்சனை தொற்று முடிவுக்கு வரும்வரை ஆம்னி பேருந்துகளை இயக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதே சமயத்தில், மற்றொரு தனியார் ஆம்னி பேருந்துகள் சங்கத்தின் தலைவரான அஃப்சல், தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்றாற்போல் தமிழகத்தில் காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.




மகாராஷ்ட்ரா, சத்தீஸ்கர், டெல்லி ஆகிய மாநிலங்களில் முழுநேர இரவு ஊரடங்கு அமலில் இருப்பதால், தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பொதுமக்கள் கருதுகின்றனர். இதனால், தங்களது சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் சென்னை உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த தருணத்தில் ஆம்னி பேருந்துகளின் சங்கங்கள் இவ்வாறு மாறுபட்ட முடிவுகளை எடுத்திருப்பது பொதுமக்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.