Indias Voters Count: இந்தியாவில் அதிக வாக்காளர்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில், தமிழ்நாடு நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

Continues below advertisement


இந்தியாவில் 99 கோடி வாக்காளர்கள்:


இந்தியாவில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்படி, நாட்டின் மக்கள் தொகை 121 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரத்து 977 பேர் நாட்டில் இருந்தனர். இது முந்தைய 2001ம் ஆண்டு கணக்கெடுப்பை காட்டிலும், 17.7 சதவிகிதம் அதிகம், அதாவது ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.77 சதவிகிதம் வளர்ச்சி பதிவாகி இருந்தது. இதே சூழலை தற்போது கருத்தில் கொண்டால் இந்தியாவில் தற்போது மக்கள் தொகை எண்ணிக்கை 154 கோடியாக இருக்க வேண்டும். ஆனால், குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக சரிந்துள்ளதால், வெறும் 1.1 சதவிகிதம் என கணக்கிட்டு நாட்டின் மக்கள் தொகையை 141 கோடியாக மத்திய அரசு குறிப்பிடுகிறது. இந்நிலையில் தான், நாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 99 கோடியை எட்டியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



எகிறிய வாக்காளர் எண்ணிக்கை


தேர்தல் ஆணைய நிலவரப்படி, இந்தியாவில் 2025ம் ஆண்டில் 98 கோடியே 99 லட்சத்து 87 ஆயிரத்து 326 பேர் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 70.28 சதவிகிதம் பேர் வாக்காளர்களாக உள்ளனர். மொத்த வாக்காளர்களில் 51.16 சதவிகிதம் பேர் ஆண்களாகவும், 48.84 சதவிகிதம் பேர் பெண் வாக்காளர்களாவும் உள்ளனர். அதாவது பெண்களை காட்டிலும் 2 கோடியே 30 லட்சத்து 8 ஆயிரத்து 423 ஆண்கள் கூடுதல் வாக்காளர்கள் உள்ளனர். அனைத்து மாநிலங்களிலும் சேர்த்து 49 ஆயிரத்து 383 பேர் மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் ஆவர். கடந்த 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது 96 கோடியே 86 லட்சமாக இருந்த வாகாளர்களின் எண்ணிக்கை, ஓராண்டு இடைவெளியில் 2.13 கோடி அதிகரித்து 98 கோடியே 99 லட்சமாக வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ்நாடு வாக்காளர் நிலவரம்:


நாட்டிலேயே அதிக வாக்காளர்களை கொண்ட மாநிலங்களின் பட்டியலில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. தொடர்ந்து, 6 கோடியே 39 லட்சத்து 40 ஆயிரத்து 209 வாக்காளர்களை கொண்டு தமிழ்நாடு நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இதில் 3 கோடியே 13 லட்சத்து 9 ஆயிரத்து 963 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 26 லட்சத்து 20 ஆயிரத்து 625 பெண் வாக்காளர்களும் அடங்குவர். அதாவது ஆண்களை காட்டிலும் பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட, அருணாச்சலபிரதேசம், அசாம், பீகார், கோவா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. இதுபோக நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் தான் 9 ஆயிரத்து 421 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர். அதேநேரம் மிசோரம், நாகாலாந்து மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் மூன்றாம் பாலின வாக்காளர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


SIR வேலையை காட்டுமா?


மேற்குறிப்பிடப்பட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, நாட்டின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் 5.45 சதவிகிதம் பேர் தமிழ்நாட்டில் உள்ளனர். இதனிடையே, அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், பீகாரில் நடைபெறுவதைப் போன்ற சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகள் தமிழ்நாட்டிலும் நடைபெறலாம்.  அப்போது, இறந்தவர்கள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களின் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். அதனால், தமிழ்நாட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. அதேநேரம், புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியையும் முன்னெடுத்தால் இந்த எண்ணிக்கை ஈடு செய்யப்படலாம். 


அதுபோக, தமிழ்நாட்டில் தங்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் வாக்குரிமை அளித்தால், அது மாநிலத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்தக்கூடும். மேலும், தேசியக்கட்சிகளுக்கான வாக்கு வங்கியையும், தமிழ்நாட்டில் வலுப்படுத்தும் என கூறப்படுகிறது. இதனால், மாநிலத்தின் அரசியல் சூழலே மாறக்கூடும் என்பதே அரசியல் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.