பாட்டாளி மக்கள் கட்சி அக்கட்சியின் நிறுவனராக இருக்கக்கூடிய ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவருக்கும் இடையே, மோதல் நிலவி வருவதால், பாமக இரண்டு அணிகளாக செயல்பட்டு வருகிறது. கட்சியில் பிரச்சினை நிலவிவரும் நிலையில் அன்புமணி ராமதாஸ், உரிமை மீட்பு நடைபயணத்தை தேர்தல் பிரச்சாரப் பயணமாக மேற்கொண்டு வருகிறார். 

ராமதாஸ் - அன்புமணி ஆலோசனை 

தேர்தல் நெருங்கி வருவதால் இரண்டு தரப்பு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களிடம் தொடர்ந்து பல்வேறு கட்ட ஆலோசனைகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே தனியார் மண்டபத்தில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமக மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் கூட்டணி குறித்து பேசி இருக்கும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுற்றுலா அழைத்து செல்வேன் அன்புமணி 

மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள், மாவட்டத் தலைவர்கள் மற்றும் பாமகவின் பிற அணிகளை சேர்ந்த மாநில நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணியானது நடைபெற்று வருகிறது. யாரும் போட்டி போட்டுக் கொண்டு, அதிக உறுப்பினர்களை சேர்த்து உள்ளேன் என்பதை காட்டுவதற்காக உறுப்பினர்கள் இல்லாதவர்களை சேர்த்து கணக்கு காட்ட வேண்டாம்.

உண்மையாக கட்சிக்கு எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதை நியாயமாக சேருங்கள். சரியாக பணி செய்பவர்களை நான் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்வேன். உண்மையான உறுப்பினர் சேர்க்கை மட்டுமே நடைபெற வேண்டும், அதிகமாக சேர்க்க வேண்டும் என டிராமா வேலையில் ஈடுபட வேண்டாம் என தெரிவித்தார். 

டிசம்பரில் சிறை நிரப்பும் போராட்டம் 

திமுக அரசு நமக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் தொடர்ந்து, ஏமாற்றி வருகிறது. இட ஒதுக்கீடு வேண்டுமென பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் இதுவரை, வன்னியர்களுக்கு எதிராக திமுக செயல்பட்டு வருகிறது. விரைவில் டிசம்பர் மாதம் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

தமிழ்நாடு சிறையில் 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடம் இருக்கிறது. ஆனால் நாம் நடத்தும் போராட்டத்தில் 5 லட்சம் பேர் கலந்து கொள்ள வேண்டும். வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும் என சிறை நிரப்பும் போராட்டம் குறித்து அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வெளியாகும் என தெரிவித்தார்.

"கட்சி நம் கட்டுப்பாட்டில் தான் உள்ளது"

கட்சியில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு ஒரு சிலர் மட்டுமே காரணம். அவர்கள் யார் என்பது உங்களுக்கே தெரியும். கட்சியில் நடைபெறும் பிரச்சனைகள் சரி செய்து விடுவோம். கட்சி முழுவதும் நம்மிடம் தான் இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் சின்ன ஒதுக்கீடு செய்யப்பட்ட, கடிதமும் நமக்கு தான் வந்திருக்கிறது என பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், இங்கு இருப்பவர்கள் தான் நாளை சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடப் போகிறீர்கள், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடப் போகிறீர்கள், ஊராட்சி மன்ற மற்றும் நகராட்சி தேர்தல்களிலும் போட்டியிடப் போகிறீர்கள் எனவே தளத்தில் சென்று பணி செய்யுமாறு அறிவுறுத்தல் வழங்கினார்.

"கூட்டணி குறித்து விரைவில் முடிவு"

கூட்டணி குறித்து அன்புமணி ராமதாஸ் பெரிதாக பேசாத நிலையில், கூட்டணி ஆட்சியில் பாமக பங்கு பெற வேண்டும் அது நமது இலக்காக இருக்கும். 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்க உள்ளோம். அதற்கான பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட முடிந்த தருவாயில் இருக்கின்றன. நீங்கள் ஆசைப்படுகின்ற விருப்பப்படுகின்ற கூட்டணியாகவே அது அமையும். கூட்டணி குறித்து ஓரிரு வாரங்களில் கூட முடிவெடுக்கப்படலாம் என நிர்வாகிகள் மத்தியில் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.