சென்னையில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,


“ இந்தியாவில் 14 இடங்களில் வைரஸ் பகுப்பாய்வு மையங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் டெல்டா பிளஸ் வைரசால் இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மாதிரிகள் பெங்களூருவில் பரிசோதிக்கப்பட்டன. அவர்களின் குடும்பத்தார், அருகில் வசிப்பவர்கள். உறவினர்களை பரிசோதித்து வருகிறோம்.


இந்த 9 பேரும் ஏற்கனவே தொற்று ஏற்பட்டு குணம் அடைந்துள்ளனர். அதில், ஒருவர் திருமணமே செய்துகொண்டுவிட்டார். மற்றவர்களும் அவர்களின் பணிகளுக்கு திரும்பியுள்ளனர். மதுரையைச் சேர்ந்த ஒருவருக்கு மட்டும்தான் இறந்த பின்பு மாதிரி எடுக்கப்பட்டது.




கொரோனா உச்சத்தில் இருந்தபோது ஏற்பட்ட தொற்றுதான் இது. இதனால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆனாலும், டெல்டா பிளஸ் வைரஸ்தான் 3வது அலையாக உருவெடுக்குமோ  என மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


எனவே, தமிழகத்திலே வைரஸ் பகுப்பாய்வு மையத்தை அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஒரு யோசனையைத் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஐ.சி.எம்.ஆர். நடத்தும் ஆய்வுக்கூடங்கள்தான் உள்ளன. மாநில அரசின் சார்பில் இதுவரை வைரஸ் பகுப்பாய்வு மையம் அமைக்கப்படவில்லை.


முதல்வரின் அறிவுறுத்தலின்படி சென்னையில் இந்த மையத்தை அமைக்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவெடுத்துள்ளது. அந்த வகையில், அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி வேண்டி கடிதம் அனுப்பியிருக்கிறோம்.




அதன் உபகரணங்கள் வாங்குவதற்கு இரண்டரை கோடி ரூபாய் செலவாகும். அதற்கும் இன்று உத்தரவிட்டுள்ளோம். 20 முதல் 25 நாட்களில் இந்த மையம் அமைக்கப்படும். இனி பரிசோதனை மாதிரிகளை வெளிமாநிலத்திற்கு அனுப்ப தேவையிருக்காது.


முதல் டெல்டா பிளஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நபரை கண்டறிந்தது முதலே கண்காணிப்பு பணிகள் தொடங்கிவிட்டன. செவிலியர் பாதிக்கப்பட்ட உடனேயே அவருடன் தொடர்பில் இருந்தவர்களை பரிசோதித்தோம். அவர்களுக்கு தொற்று ஏற்படவில்லை. இந்த வைரஸ் பெரிதளவில் பரவவில்லை.


ஆனாலும், தீவிர கண்காணிப்பில் சுகாதாரத்துறை ஈடுபட்டுள்ளது. தொற்று ஏற்பட்டுள்ள 9 பேரின் குடும்பத்தினரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எந்த வகையிலும் பயமில்லை. கொரோனாவிற்கான அறிகுறியே அந்த வட்டாரத்தில் இல்லாதபோது கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.


தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனாவிற்கு பிந்தைய பாதிப்புகளுக்கான சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்திருந்தார். இதன்படி, கிங் இன்ஸ்டியூட்டில் பெரியளவில் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் முதல்வர் அதனை திறந்து வைப்பார்.


அனைத்து வட்டார, மாவட்ட, மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றின் அளவு குறைந்துள்ளதால் படுக்கைகள் காலியாக உள்ளது. இதனால், பொது நோய்களுக்கும் முக்கியத்துவம் அளித்து டயாலிசிஸ், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுககும் பொதுமக்களுக்கு கவனம் செலுத்தப்பட்டு தேவையான சிகிச்சை அளிக்கப்படும்.” இவ்வாறு அவர் கூறினார்.