கரூரில் 16,125 மனுக்கள் மீது தீர்வு கண்டு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது - ஆட்சியர் தங்கவேல் பெருமிதம்
கரூர் வட்டம் வெள்ளியனை ஊராட்சி செல்லாண்டிப்பட்டியில் ஊரகப் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.செ.ஜோதிமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ மற்றும் சிவகாமசுந்தரி ஆகியோர் பங்கேற்றனர்.
18.12.2023 முதல் 06.01.2024 வரை கரூர் மாநகராட்சியில் 16 இடங்களிலும், நகராட்சிகளில் 13 இடங்களிலும், பேரூராட்சிகளில் 16 இடங்களிலும், மாநகராட்சி ஒட்டியுள்ள புறநகர்ப் பகுதிகளில் 5 இடங்களிலும், என மொத்தம் 50 இடங்களில் "மக்களுடன் முதல்வர்" முகாம் நடைபெற்றதில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வேண்டி 20,748 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றில் 16,165 மனுக்கள் பல்வேறு துறையின் கீழ் மனுதாரர்களுக்கு நல திட்டங்களாக வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது நாளாக குறைந்து வரும் மேட்டூர் அணையின் நீர்வரத்து - வினாடிக்கு 3,087 கன அடியாக சரிவு
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 4,521 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 4,197 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 3,087 கன அடியாக குறைந்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் கே.ஆர். ஸ்ரீராம் - கொலீஜியம் பரிந்துரை
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக, கே.ஆர். ஸ்ரீராமை நியமிக்கலாம் என கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஆர்.மகாதேவனை, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் உயர்த்தியுள்ளது. அவருக்குப் பதிலாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
"மக்களுடன் முதல்வர்" திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த 51 மனுக்கள் மீது உடனடியாக 2 மணிநேரத்தில் தீர்வு
"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 367 கிராம ஊராட்சிகள் உள்ளடங்கிய பகுதிகளில் 92 முகாம்கள் இன்று முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் தொடக்க விழா ஓமலூர் அருகேயுள்ள காமலாபுரம் கிராமத்தில் நடைபெற்றதுஅனைத்துத் துறை சார்ந்த குறைகேட்புப் பணிகளை தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை கே.என்.நேரு மற்றும் தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர். மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த 51 மனுக்கள் மீது உடனடியாக 2 மணி நேரத்தில் தீர்வு காணப்பட்டு, ரூ.13.63 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இருவரும் வழங்கினார்.
குடிபோதையில் செய்த கொலை...இனி யாரும் இதை செய்யக்கூடாது - நீதிமன்றம் எடுத்த அதிரடி முடிவு
நுகர்பொருள் வாணிபக்கழக குடோன் பாதுகாவலரை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.அரசு தரப்பில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட அருள்மொழிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட அருள்மொழி, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நில மோசடி; முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி விசாரணை
கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலம் போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக எழுதி பெற்றதாக அளித்த புகாரின் பேரில், வாங்கல் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.100 கோடி ரூபாய் நில மோசடி தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உறவினர் வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
வானிலை நிலவரம்:
தமிழகத்தில் வரும் 17-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.