தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எச்.ஐ.வி. எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு ஓய்வூதிய திட்டம் எதுவும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயல்படுத்தப்படவில்லை.
25 ஆயிரம் பேருக்கு பாதிப்பு:
பாதிக்கப்பட்டோர் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு ரூபாய் 1.81 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 1 லட்சத்து 57 ஆயிரத்து 908 பேருக்கு எச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களில் தமிழ்நாட்டில் 25 ஆயிரம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதற்கு தமிழ்நாட்டில் எச்.ஐ.வி. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்விற்காக உதவி செய்பவர்கள், மருத்துவ நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மக்கள் அதிர்ச்சி:
அதேசமயம், தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 25 ஆயிரம் பேருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பதாக வெளியான தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், எச்.ஐ.வி. தொற்று பாதிப்பைத் தடுக்க ஏற்கனவே எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுடன் மேலும் கடும் நடவடிக்கைகளையும், இளைஞர்கள் மற்றும் வளரும் பருவத்தினர் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அபாயம் குறித்தும் மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். பாதுகாப்பற்ற மற்றும் பலருடன் உடலுறவு உள்ளிட்ட பல காரணங்களால் எச்.ஐ.வி. தொற்று பரவும் அபாயம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.