டோக்கன் விநியோகம்:
பொங்கல் ரொக்கப் பணம் வழங்கும் நிகழ்ச்சியினை அடுத்த மாதம் வரும் ஜனவரி 2ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, அதேநாளில் அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பினை பொது மக்களுக்கு வழங்க உள்ளனர். அந்த வகையில், ரூ.1000-த்துடன் கூடிய பொங்கல் பரிசு தமிழகத்தில் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஆயத்த பணிகள் நாளை முதல் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதைதொடர்ந்து, பரிசுப்பொருட்களை பெறுவதற்கான டோக்கனை, ரேஷன் கடை ஊழியர்களே வரும் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை பயனாளர்களின் வீடுகளுக்கே சென்று விநியோகிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டோக்கன் பயன் என்ன?
தினமும் 100 முதல் 200 கார்டுகளுக்கு ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்தெந்த தெருவில் உள்ளவர்கள் எந்த தேதியில், எந்நேரத்தில் வந்து பொருட்களை பெற வேண்டும் என்ற விவரங்கள் அந்த டோக்கனில் குறிப்பிடப்பட்டு பயனாளர்களுக்கு வழங்கப்படும் என கூறப்படுகிறது.
பொங்கல் பரிசு மற்றும் ரூ.1000 பெறுவதற்காக பயனாளர்கள் ஒரே நேரத்தில் கூடி, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க டோக்கன் முறை செயல்படுத்தப்படுகிறது. 13ம் தேதி போகிப் பண்டிகை தொடங்குவதற்கு முன்பு அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும், பொங்கல் பரிசு வழங்கி முடிக்க பொது விநியோகத் திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
பொங்கல் பரிசு பெறுவது எப்படி?
ரேஷன் கடைகளில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு, பயனாளர்களின் குடும்பத்தில் ஒருவரது கைவிரல் ரேகை பதிவு அவசியம். அதேபோல பொங்கல் பண்டிகைக்கான பச்சரிசி மற்றும் சர்க்கரை பெறவும் ஸ்மார்ட் கார்ட்டுடன், கைரேகையும் பதிவு செய்ய வேண்டும். ரூ.1000 ரொக்கம் பெறவும் கைரேகைப் பதிவு முறை அவசியமாக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் யாராவது ஒருவரின் கைரேகைப் பதிவு செய்தால் மட்டுமே பொங்கல் பரிசு கிடைக்கும். பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடு நடைபெறாமல் தடுப்பதற்காக கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு:
தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் நடப்பாண்டு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் இடம்பெற்றன. ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரொக்கத் தொகை வழங்கப்படவில்லை. அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கத் தொகை கொடுக்கப்படவில்லை என்று ஆளுங்கட்சியினர் சொன்னாலும், அதனை அ.தி.மு.க.வினர் கடுமையாக விமர்சித்தனர். அதோடு, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் பல்வேறு பொருட்கள் தரமில்லாமல் இருந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டினர். இது சட்டப்பேரவை வரை எதிரொலித்ததால் பொங்கல் சிறப்பு தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்களை கருப்பு பட்டியலுக்குள் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.
2023ம் ஆண்டு பரிசுத்தொகுப்பு:
அதைதொடர்ந்து, வரும் பொங்கல் விழாவை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அதேநேரம், பொங்கல் பரிசு தொகுப்பில், செங்கரும்பு இடம்பெறாததற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.