Tamilnadu Health Dept: ”அரசு மருத்துவமனைகள் சுத்தமாகவும், சாப்பாடு தரமாகவும் இருக்கணும்” - தமிழ்நாடு அரசு உத்தரவு

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வார்டுகள் மற்றும் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வார்டுகள் மற்றும் கழிவறைகள் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும் என, தமிழக சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

Continues below advertisement

தமிழக அரசு உத்தரவு:

இதுதொடர்பாக அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ”மருத்துவமனையை தூய்மையாக வைத்திருப்பதன் மூலம் அனைத்து நோய்களுக்கும் எளிதாக தீர்வு காணமுடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். மருத்துவமனையை தூய்மையாக வைத்திருந்து நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தருவதை உறுதி செய்யும் வகையில் கீழ்க்கண்டவற்றை பின்பற்ற கேட்டுக்கொள்கிறேன். அனைத்து வார்டுகளிலும் கட்டில்கள் சீரான வரிசையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சேதமடையாத படுக்கை விரிப்புகள் மற்றும் அதே நிறத்திலான தலையணை கவர்கள் பயன்படுத்தப்பட வேண்டும். படுக்கை விரிப்புகளை பொறுத்தமட்டில் படுக்கைகளின் எண்ணிக்கையை விட குறைந்தது 3 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.

சில மருத்துவமனைகளில் படுக்கைகள் மற்றும் தலையணைகள் தினசரி மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட நாட்களில் பல்வேறு வண்ணத்துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு நல்ல நடைமுறையாகும். நிதி இருப்பின் இதுபோன்று செயல்படலாம். படுக்கை விரிப்பை தினமும் சலவை செய்து பயன்படுத்தவேண்டும். புதிதாக வாங்கிய படுக்கை விரிப்புகளை அவ்வப்போது பயன்படுத்துவதை கைவிட்டு தொடர்ந்து பயன்படுத்தவேண்டும். அனைத்து வார்டுகளின் கழிவறைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

போதிய அளவு கிருமி நாசினியை இருப்பு வைத்து பயன்படுத்தவேண்டும். கழிவறைகள் முறையாக தூய்மைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய பதிவேடுகளை பராமரித்து ஒவ்வொரு முறை சுத்தப்படுத்தும்போது பராமரிப்பு பணியாளர்கள் மூலம் பதிவிட வேண்டும். இதை செவிலியர்கள் செயல்படுத்தவேண்டும்.

முறையாக கழிவறைகள் சுத்தம் செய்யப்படாத பட்சத்தில் இதுகுறித்து செவிலியர்கள் நர்சிங் சூப்பிரண்டு மற்றும் உறைவிட மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும். பணியில் இருக்கும் மருத்துவர்களும் மருத்துவமனை சுத்தமாக இருப்பதை அவ்வப்போது பார்வையிட்டு உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும். மருத்துவமனை வளாகம் மிக சுத்தமாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள் பாராட்டு தெரிவிக்கவேண்டும். வார்டு, கழிவறை சுத்தமாக பராமரிக்கப்படாதது தெரியவந்தால் மருத்துவர்கள் உறைவிட மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும். உறைவிட மருத்துவ அதிகாரிகள் மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பை கவனிக்கவேண்டும். உறைவிட மருத்துவ அதிகாரி அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வார்டு மற்றும் கழிவறைகளை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். மருத்துவமனையை சுற்றி சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். மருத்துவமனையில் வழங்கப்படும் சுகாதாரமான உணவை உட்கொள்ள ஊக்குவிக்க வேண்டும். நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டதா? அதுவும் சரியான நேரத்தில் வழங்கப்பட்டதா? என்பதை நோயாளிகளிடம் விசாரணை செய்து உறைவிட மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தவேண்டும். சமையல் செய்யும் இடம் சுகாதாரமாக இருப்பதையும், சமையலுக்கு தரமான பொருட்கள் பயன்படுத்துவதையும், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதையும் உறுதிபடுத்தவேண்டும்.

மின்சாதனங்கள், சலவை எந்திரங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். திடக்கழிவுகள் அகற்றுவது தினசரி அடிப்படையில் அகற்றப்பட வேண்டும். ஒவ்வொரு நோயாளியையும் மரியாதையுடன் நடத்தவேண்டும்” என ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.

Continues below advertisement