தொழில் நிறுவனங்களில் வேலை பெறுவதற்கான போதிய திறன் பட்டதாரிகளிடையே இல்லை என, ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் ரவி பேச்சு:
புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பான கருத்தரங்கு, சென்னையில் உள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ஆளுநர் ரவி, ”இந்தியாவில் பல லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தும் வேலை இல்லாமல் இருக்கின்றனர். பணியமர்த்தும்போது பட்டப்படிப்பை விட தனித்திறனையே தொழில் நிறுவனங்கள் விரும்புகின்றன. தமிழகம் மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக உள்ளது. ஆனால், தொழில் நிறுவன விரிவாக்கம் தொடர்பாக கேட்டபோது தொழிலதிபர்கள் அதிர்ச்சி தரும் பதிலை தருகிறார்கள். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தும் அளவுக்கு பட்டதாரிகளுக்கு திறன் இல்லை என்ற பதிலே வருகிறது. பொறியியல் படித்த 80 முதல் 90 சதவிகித மாணவர்களுக்கு வேலை வழங்க முடியாத நிலை இருப்பதாக கூறுகிறார்கள். இளங்கலை பட்டம் முடித்த 70% பேருக்கும் வேலை கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. பட்டப்படிப்பில் வரலாறு படிப்பவர்களுக்கும், அறிவியல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும். ஆகவே தேசிய கல்விக்கொள்கை என்பது ஒரு புரட்சிகரமான கல்விக்கொள்கை ஆகும். இதன் மூலமாக ஏராளமான பட்டதாரிகளை உருவாக்க முடியும். இந்த கல்விக்கொள்கை மக்களால் உருவாக்கப்பட்டது.” என ஆளுநர் பேசியுள்ளார். இதன் மூலம், மாநிலக் கல்வி கொள்கை வாயிலாக மாணவர்களின் திறன் மேம்படுவது இல்லை எனும் விதத்தில் ஆளுநர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வள்ளலார் தொடர்பான சர்ச்சை பேச்சு:
முன்னதாக, கடலூர் மாவட்டம், வடலூரில் வள்ளலாரின் 200-வது ஜயந்தி விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், ”உலகின் மிகப்பெரிய ஞானியான வள்ளலாரின் 200வது ஜெயந்து விழாவில் கலந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. வள்ளலார் 10 ஆயிர வருட சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம். சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகளின் நூல்களை படித்துள்ளேன். அதேபோல் வள்ளலாரின் நூல்களை படித்த போதும் பிரமித்து போனேன். இங்குள்ள மக்களின் உடையும், தோற்றமும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் அடிப்படையில் உண்மை என்பது ஒரே கடவுள், அவன் படைத்த மனிதன், செடி, கொடிகள் எல்லாம் ஒரே குடும்பம். அந்த வகையில் என்னில் உன்னையும், உன்னில் என்னையும் காண்பது சனாதான தர்மம் தான்” என பேசினார். சனாதன தர்மத்தின் எதிர்ப்பாளரான வள்ளலார் தொடர்பாக தவறான கருத்துகளை கூறியதற்காக, அவரது பேச்சிற்கு சமூகவலைதளங்களில் கடும் கண்டங்கள் குவிந்தன.