மாநிலங்களுக்கு கலாசாரம் என எதுவும் கிடையாது என்று தமிழ்நாடு ஆளுநர் ரவி பேசி இருப்பது சர்ச்சையாகியுள்ளது.


ஆளுநர் மாளிகையில் விழா:


தெலங்கானா  மாநிலம் உருவான தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆளுநர் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. முக்கிய விருந்தினர்களாக பங்கேற்றவர்களுக்கு நினைவுப்பரிசும் வழங்கப்பட்டன.


ஆளுநர் பேச்சு:


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி. ” சர்வதேச பிரச்னைகளை தீர்ப்பதற்காக உலக நாடுகள் தற்போது இந்தியாவை எதிர்பார்க்கின்றன. ஏனென்றால் அது இந்தியாவால் முடியும், அதை தான் இந்தியா தற்போது செய்துகொண்டிருக்கிறது. பல்வேறு காரணங்களால் உலகமே தற்போது வேறுபட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டம் நமது நாட்டை பாரதம் என குறிப்பிடுகிறது. ஆனால், நமது பிள்ளைகளுக்கு பாரதம் என்றால் என்னவென, நாம் கற்றுக்கொடுக்கவில்லை. ஆங்கிலேயர்கள், முகலாயர்கள் உள்ளிட்ட பலரின் படையெடுப்புகளுக்கு முன்னதாக, இந்தியாவில் பல அரசர்கள் இருந்தனர்.


”மாநிலங்களுக்குள்ளாகவே பல கலாசாரங்கள்”


பலரின் ஆட்சியின் கீழ் பாரதம் இருந்தது. ஆனால், ஒரு முனையில் இருந்து மற்றொரு முனை வரை சமூகமாக பாரதம் ஒற்றுமையாக இருந்தது. வேறு வேறு மாநிலங்களுக்கு செல்கிறோம் என்ற எண்ணம் யாரிடமும் இருந்ததில்லை. கலாசாரம் தான் நம் அனைவரையும் ஒன்றாக இணைத்து இருந்தது. கடவுள்களான சிவன், கிருஷ்ணர் மற்றும் தேவி ஆகியோர் அனைத்து தரப்பினராலும் பிரார்திக்கப்பட்டனர்.  ஆனால், இப்போது கலாசாரம் முழுமையாக மாறுபட்டுள்ளது. ஒரு மாநிலத்திற்குள்ளேயே பல கலாசரங்கள் உள்ளன. 50 முதல் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு இடைபட்ட தூரத்திற்கெல்லாம் வேறு வேறு கலாசாரம் பின்பற்றப்படுகிறது. 


”மாநிலங்களுக்கு என கலாசாரம் கிடையாது”


இந்தியாவில் நிர்வாக வசதிக்காகவே மாநிலங்கள் முதலில் உருவாக்கப்பட்டன. பின்பு, ஆட்சியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மொழி ஒரு பிரச்னையாக இருக்கக் கூடாது என்பதற்காக மொழிவாரியாக மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.  ஆனால், அதுவே தற்போது அரசியல் அடையாளமாக மாறிவிட்டது. அதன்படி தான் தற்போது தமிழர்கள், தெலுங்கர்கள் போன்ற அரசியல் அடையாளங்களை பெற்றுள்ளோம். இதன் மூலம் பாரதம் என்பதையே நாம் இழந்துவிட்டோம். இந்த பிரிவினை என்பது ஆபத்தானது. ஒரு மாநிலத்தின் கலாசாரம் என ஒன்று இல்லை.  இதுபோன்ற கற்பனை அடையாளங்கள் நாட்டின் வலிமையை குறைக்கிறது” என ஆளுநர் பேசியுள்ளார். மாநிலங்களுக்கு என எந்தவித தனிப்பட்ட கலாசாரமும் இல்லை என ஆளுநர் பேசி இருப்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதனிடையே, ஊட்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ரவி தலைமையில் நாளை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி ஆளுநர் அங்கு சென்றுள்ளார்.