தமிழ்நாடு மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலில் ஆழமான பகுதிகளில் சென்று மீன்பிடித்து வருகின்றனர். சில சமயங்களில் எல்லையை கடந்ததாக கூறி அவர்களை அண்டை நாட்டு கடலோர காவல்படையினர் கைது செய்து வருகின்றனர். குறிப்பாக, இலங்கை கடலோர காவல்படை தமிழக மீனவர்களை அடிக்கடி கைது செய்து வருகிறது. இந்த சூழலில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் குவைத் கடலோர காவல்படை தமிழக மீனவர்களை கைது செய்தது. இது தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினர் மத்தியிலும், மீனவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


மீனவர்களை கைது செய்த கடலோர காவல்படை:


தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 


"இன்றைய சில நாளிதழ்களில் குவைத்தில் கைதான இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களை மீட்க தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செய்தி வெளியாகியுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி அன்று குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட நான்கு தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்திட உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 9.2.2024 அன்று கடிதம் எழுதியிருந்தார்.


தமிழக மீனவர்கள் பாதுகாப்பு;


தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் அண்டை நாடுகளைச் சேர்ந்த கடற்படையினரால் அடிக்கடி கைது செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் உரிய தூதரக வழிமுறைகளைப் பின்பற்றி விரைவான, தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.


மீண்டும் கடிதம்:


குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்திட விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை விடுதலை செய்யப்படாமல் இருப்பதால், அவர்களை விடுதலை செய்திட உரிய தூதரக நடவடிக்கையை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஒன்றிய அரசின் வெளியுறவு துறை செயலாளருக்கு இன்று மீண்டும் நினைவூட்டி கடிதம் எழுதியுள்ளார்.


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.