எட்டு வழி சுங்கச்சாலை, பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள், கூடங்குளம் அணுவுலை, நியூட்ரினோ, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம், மீத்தேன் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டோர் மீது பதியப்பட்ட 5570 வழக்குகளை திரும்பப் பெற்றதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த வழக்குகள் எல்லாம் திரும்ப பெறப்படும் என்று தேர்தல் பரப்புரையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன் அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சி பொறுப்பேற்றதும் மீத்தேன், நியூட்ரினோ, வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் எல்லாம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவிப்பானது செயல்வடிவத்திற்கு வரமாலும் அரசாணை வெளியிடப்படாமலும் இருந்தது. இந்நிலையில், தற்போது ஒரே அரசாணையில் 5,570 வழக்குகளையும் வாபஸ் பெறம் செயல்வடிவத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.


அதன்படி, பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக பத்திரிகையாளர்கள் / ஊடக நிறுவனங்கள் மீது போடப்பட்ட 26 வழக்குகள், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது பதியப்பட்ட 2,831 வழக்குகள், குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட 2,282 வழக்குகள், மீத்தேன், நியூட்ரினோ, எட்டு வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தவர்கள் / போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட 405 வழக்குகள், கூடங்குளம் அணு உலைக்குக்கு எதிராகவும், விரிவாக்கத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட 26 வழக்குகள் என மொத்தமாக 5,570 வழக்குகளை திரும்ப பெறும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.




இந்த அரசாணையானது பொதுமக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், கூடங்குளம் அணு உலை போராட்டம் தொடர்பாக 100க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், அதில் வெறும் 26 வழக்குகளை மட்டுமே திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழலை காக்க களமாடும் அமைப்பான ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது. மீதமுள்ள வழக்குகளையும் திரும்ப பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அமைப்பின் நிர்வாகிகள் வலியுறுத்தி உள்ளனர்.






 


இதேபோல, எட்டுவழிச்சாலை, நியூட்ரினோ, மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்ட நிலையில், அதில் 405 வழக்குகள் மட்டுமே வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள வழக்குகளையும் தமிழ்நாடு அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்