பள்ளி, கல்லூரி, அரசு ஆவணங்களில் பெயரைக் குறிப்பிடும் போது, பெயரின் முன் எழுத்தைக் குறிப்பிட தமிழ் மொழியைப் பயன்படுத்த ஆணை வெளியிட்டுள்ளது தமிழக அரசு. "2021-2022-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை 46ன் போது தொழில்துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட
அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும்" என்று இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இந்த அரசாணையின் மூலம் தமிழ் மொழியில் பெயரை எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறை அமலுக்கு வரும் என்றும், இந்த நடைமுறை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.



மேலும் இந்த அரசாணையில் தமிழக முதல்வர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை, அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் முதலானோர் அனைவரும் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்தைத் தமிழில் குறிப்பிடவும் வலியுறுத்தப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. மாணவர்களுக்குத் தொடக்க கல்வி முதல் கல்லூரி கல்வி வரை தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகத் தமிழை மாணவர்களின் பெயரில் சேர்க்கும் இந்த ஆணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், மாணவர்கள் பள்ளியில் சேரும் போது அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு, பள்ளி, கல்லூரி முடித்த பின் வழங்கப்படும் சான்றிதழ் அனைத்திலும் தமிழில் முன்னெழுத்து வழங்கப்படும் எனவும் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களைக் கையொப்பமிடும் சூழல்கள் அனைத்திலும் தமிழ் மொழியையே பயன்படுத்த ஊக்குவிக்க அறிவுறுத்தப்பட வேண்டும் எனவும் இதில் குறிப்பிட்டுள்ளது. 


தமிழகத் தலைமைச் செயலகம் தொடங்கி, கடைநிலை அரசு அலுவலகங்கள் வரை அனைத்து அரசுத் துறை சார்ந்த ஆவணங்களிலும் பொது மக்களின் பெயர்கள் முன்னெழுத்துடன் முழுவதுமாகத் தமிழ் மொழியுடனே குறிப்பிடப்பட வேண்டும் எனவும் இந்த ஆணையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுத் துறைகளில் பெறப்படும் ஆவணங்களில் பொது மக்கள் கையொப்பமிடும் போது, தமிழ் மொழியிலேயே முன்னெழுத்துடன் கையொப்பமிட அறிவுறுத்தப்படுவதாக இந்த ஆணையில் கூறப்பட்டுள்ளது. 



மேலும், பொது மக்களுக்குத் தமிழில் கையொப்பமிடுவது குறித்த முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அரசு அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைபடும் இடங்களில் தமிழ் மொழியின் சிறப்பு, முக்கியத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் கருத்துகளைக் கொண்ட பதாகைகள் வைக்கப்பட்டு, மக்களுக்கு ஊக்கம் வழங்கப்படும் என்றும் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த சில நாள்களுக்கு முன், தமிழக அரசுப் பணிகளுக்காக எழுதப்படும் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்குத் தமிழ் மொழிப் பாடம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மீண்டும் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் மற்றொரு அறிவிப்பு வெளிவந்துள்ளது மொழி ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.