பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல நாளை முதல் தமிழ்நாடு அரசின் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை வரும் நிலையில் 17 ஆம் தேதி வரை அரசு விடுமுறை உள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் சொந்த ஊருக்கு சென்று நீண்ட நாட்கள் இருக்கும் வகையில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனர். சொந்த வாகனங்கள் தவிர்த்து, வழக்கமான ரயில்கள், சிறப்பு ரயில்களில் டிக்கெட்டுகள் நிரம்பி விட்டது. 


அதேசமயம் ஆம்னி பேருந்துகளில் 3 மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசு பேருந்துகளை நோக்கி மக்கள் படையெடுத்துள்ளனர். இதனால் சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் வசதிக்காக தமிழ்நாடு அரசு 16,932 சிறப்பு பேருந்துகளை அறிவித்துள்ளது.  அதன்படி ஜனவரி 12 ஆம் தேதி  சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 2,751 பேருந்துகளும், 13 ஆம் தேதி கூடுதலாக 3,955 பேருந்துகளும், 14 ஆம் தேதி 4,043 பேருந்துகளும் என மொத்தம் 16,932 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து 6, 183 பேருந்துகள் இயக்கப்படுகிறது. 


பேருந்துக்கான முன்பதிவுகளை நேரடியாகவும், https://www.tnstc.in இணையதளம் மற்றும் TNSTC Official App செயலி வாயிலாக இதுவரை 1.62 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும்  பேருந்து இயக்கம் குறித்து அறிந்து கொள்வதற்கும், புகார் தெரிவிப்பதற்கும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் 9445014450, 9445014436 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


அதேபோல் கோயம்பேடு தவிர்த்து மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் , தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி பைபாஸ், மாதவரம் ஆகிய 5 சிறப்பு பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும். இத்தகைய சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 24 மணி நேரமும் இணைப்பு பேருந்துகள் இயக்கப்படும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு 



  • ஆந்திரா செல்லும் பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்

  • புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்

  • தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

  • தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நெய்வேலி, சிதம்பரம் வழியாக செல்லும் பேருந்துகள் இயங்கும்

  • பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து  வேலூர், ஆரணி, திருப்பத்தூர், ஓசூர், திருப்பதிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

  • சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலி, மதுரை, கோவை, சேலம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெங்களூருவுக்கு  பேருந்துகள் இயக்கப்படுகிறது.