2023 ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடும் நிலையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் சட்டபேரவையில் முதல் கூட்டத்தொடர் நடத்துவது மரபாக உள்ளது. அந்த வகையில் நடப்பாண்டுக்கான கூட்டத்தொடர் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் இன்று தொடங்குகிறது. கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிலையில், இந்தாண்டு தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள பேரவை கூட்ட அரங்கிலேயே நடைபெறுகிறது.
கூட்டத்தொடரில் உரையாற்ற காலை 9.30 மணியளவில் சட்டப்பேரவைக்கு புறப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை பேரவைத் தலைவர் மு.அப்பாவு, செயலர் கீ.சீனிவாசன் ஆகியோர் வரவேற்கின்றனர். பின்னர் 10 மணிக்கு கூட்ட அரங்கிற்கு செல்லும் ஆளுநர் தனது உரையை வாசிப்பார்.பின்னர் அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசிப்பார்.
ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து பாராட்டும், சில புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும் வெளியாகலாம் என கூறப்படுகிறது. அதேபோல் தமிழக அரசின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையிலான அறிவிப்புகளையும் ஆளுநர் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறும். இதில் எத்தனை நாட்கள் கூட்டத்தொடரை நடத்தலாம் என முடிவு செய்யப்படும். நாளை கூடும் கூட்டத்தொடரில் சமீபத்தில் மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் திருமகன் ஈவேராவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்தி வைக்கப்படும். பின்னர் ஜனவரி 11 முதல் 13 ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமைச்சர் உதயநிதியின் முதல் கூட்டம்
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதிவியேற்றப் பின் பங்கேற்கும் முதல் கூட்டத்தொடர் இதுவாகும். அவருக்கு திமுக உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். உதயநிதிக்கு 10வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதிமுக நிலை என்ன?
அதிமுக எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியும், துணைத்தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் இரு அணிகளாக பிரிந்தனர். இதனால் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை துணைத்தலைவராக எடப்பாடி பழனிசாமி நியமித்து, இருக்கையை மாற்றும்படி கடிதம் அனுப்பி கோரிக்கை விடுத்தார். ஆனால் இருக்கை மாற்றப்படாததால் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு புறக்கணித்தது. இந்த முறையும் மாற்றம் செய்யப்படாததால் ஆளுநர் உரையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு பங்கேற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் நடந்த சட்டப்பேரவை தொடரின் கடைசி நாளில் ஆன்லைன் ரம்மி, இணைய விளையாட்டுகளுக்கு தடை உள்ளிட்ட 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.