தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் விலை ரூ. 10 முதல் ரூ. 80 வரை உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசு ஆண்டுக்கு, ரூ. 4,396 கோடி அதிகமாக வருமானம் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுவிலக்கு ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்துவதால் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்கிறது. இதன் காரணமாக மதுபானங்களின் விலை இன்று முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் மதுவகைக்கு ரூ. 10. 35 கோடியும், பீர்வகைக்கு ரூ. 1. 76 கோடி கூடுதலாக வருவாய் வர வாய்ப்பு இருக்கிறது.
விலை விவரம் :
குவாட்டர் - ரூ.10 முதல் ரூ.20 வரையும், ஆஃப் பாட்டில் - ரூ.20 முதல் ரூ.40 வரையும், முழு பாட்டில் விலை - ரூ.40 முதல் ரூ.80 வரை உயர இருக்கிறது.
முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம் 4 ம் தேதி டாஸ்மாக் கடைகளில் செயல்பட்டு வரும் பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, அந்தக் கடைகளில் இயங்கி வரும் பார்களை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 2019-2021ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகளில் பார் உரிமம் பெற்ற சிலர் தங்களுடைய பாரின் உரிமத்தை நீட்டிக்க கோரி மனுவை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், "கொரோனா ஊரடங்கு காரணமாக பல நாட்கள் டாஸ்மாக் கடைகள் செயல்படாமல் இருந்தன. இதனால் அவர்களுக்கு உரிய வருமானம் கிடைக்கவில்லை. எனவே எங்களுடைய உரிமம் காலத்தை நீட்டிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த பார் உரிமம் பெற்றவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசிற்கு சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, வருமானம் வருகிறது என்பதற்காக அரசு டாஸ்மாக் கடைகள் பார்களை நடத்தக் கூடாது. மேலும் டாஸ்மாக் கடைகளில் பயன்படுத்தப்பட்ட பாட்டில்களை எடுப்பதற்கு விடுக்கப்பட்ட டென்டர் மற்றும் ஸ்நாக்ஸ் விற்க விடுக்கப்பட்ட உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
அத்துடன் டாஸ்மாக் கடைகள் மதுபான விற்பனைக்கு மட்டுமே உரிமம் பெறுகின்றன. அந்த இடங்களில் மதுபானத்தை குடிக்க பார் அமைக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த பார்களில் மதுபானங்களை குடித்துவிட்டு பொது இடங்களில் மது குடிப்போர் செல்ல நேரிடும். ஆகவே இது பொதுமக்களுக்கு மிகவும் தொந்தரவு அளிக்கும் செயலாக மாறிவிடும். எனவே டாஸ்மாக் கடைகள் இந்த பார்களை உடனடியாக மூட வேண்டும். ஏற்கெனவே உரிமம் அளிக்கப்பட்ட பார்களை 6 மாதங்களுக்குள் நிச்சயம் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1937ஆம் ஆண்டு மெட்ராஸ் தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. அதில் மதுபான குடிப்பவர்களால் சமூதாயத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை தடுக்க மது அருந்த தடை விதிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரத்திற்கு பிறகு மது குடிப்பதற்கு தடைவிதிக்கப்படவில்லை. அதற்கு பதிலாக மதுவிற்பனை மற்றும் தயாரிப்பு ஆகியவற்றிற்கு இந்தச் சட்டம் மூலம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்