தீபாவளி பண்டிகையை பட்டாசு வெடித்து கொண்டாடுவது வாடிக்கையாக உள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காற்று மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பட்டாசுகள் வெடிப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், பட்டாசுகள் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பசுமைப்பட்டாசுகள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வரும் நவம்பர் 4-ந் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாகவே பட்டாசுகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. அதேசமயத்தில் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் உள்ளிட்டவற்றின் விற்பனை நடைபெறாத வகையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், உச்சநீதிமன்றம் தடை செய்துள்ள சரவெடி, பேரியம் ரசாயனம் கலந்து தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்று என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறி செயல்பட்டால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,
“ உச்சநீதிமன்றம் தனது 29.10. 2021ம் தேதியிட்ட தீர்ப்பில் 2016, 2017, 2018ம் ஆண்டுகளில் பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையிலும், அதைத்தொடர்ந்து வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளை மீண்டும் வலியுறுத்தி, எதிர்வரும் தீபாவளி பண்டிகை மற்றும் இன்னபிற நிகழ்வுகளின்போது சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், ஆனால் பொதுமக்களின் உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் சரவெடிகள் போன்ற பட்டாசுகளைத் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்யவோ அல்லது வெடிக்கவோ தடை விதித்து ஆணையிட்டுள்ளது.
மேற்படி, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையான அளவில் செயல்படுத்தும் வகையில், தமிழ்நாட்டின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் சரவெடி மற்றும் பேரியம் ரசாயனம் கலந்த பட்டாசுகள் தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை சேமித்து வைக்கவும், கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மேற்படி தடை செய்யப்பட்ட பட்டாசுகளை, சரவெடி உள்பட பட்டாசு வகைகளை வெடிக்கக்கூடாது எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி, உச்சநீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது அரசு விதிகளின்படி குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்