ரேஷன் கடைகளுக்கு விடுமுறை:
பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.1,000த்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாநிலம் முழுவதும் வழங்கப்படுகிறது. இதற்காக பயனாளர்களுக்காக டோக்கன் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகள் மூலம் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு முன்னதாக அனைத்து பயனாளர்களுக்கும் பரிசு தொகுப்பு வழங்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமையான நாளையும் ரேஷன் கடைகள் செயல்படும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் நோக்கில் ஜனவரி 27ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனவரி 16ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளித்து உணவுப்பொருள் வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக 27ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறையானது 16ம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அரசு அறிவுறுத்தல்:
பொங்கல் தொகுப்பில் ஏற்கனவே இருப்பில் உள்ள பச்சரிசியை விநியோக்க கூடாது என்றும், இரண்டு ரூ.500 தாள்கள் மட்டுமே வழங்க வேண்டும், சில்லறை மாற்றி தரக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளை வழங்கப்படும் அரசின் தரத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பு:
2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 4ம் தேதி முதல் 8ம் தேதி வரையில் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யப்பட்டது. அதைதொடர்ந்து, பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை, சென்னையில் கடந்த 9ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் தற்போது பொங்கல் பரிசு விநியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1,000 பணத்துடன் கூடிய ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழுக்கரும்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.
பரிசுதொகுப்பை மாற்றிய திமுக அரசு:
கடந்த அதிமுக ஆட்சியில் மக்களை கவரும் வண்ணம் அதிகப்பட்சமாக ரூ.2,500 பணத்துடன் கூடிய கரும்பு,பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. திமுக அரசு பொறுப்பேற்றதும் கடந்தாண்டுபணம் எதுவும் வழங்கப்படாமல் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
இது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்திய நிலையில், பொருட்களும் தரமில்லாமல் வழங்கப்படதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக பொங்கல் சிறப்பு தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்களை கருப்பு பட்டியலுக்குள் கொண்டுவர தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தான் நடப்பாண்டு பொங்கலை கொண்டாட சூப்பரான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.