20 மாதங்களில் திமுக அரசு இமாலய சாதனைகளை செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதிலுரை:
கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. கடைசி நாளான இன்று காலையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரை அளித்தார்.
அவர் தனது உரையில், “ தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்று 20 மாதங்களை கடந்துள்ள நிலையில், அதற்குள் இமாலய சாதனைகளை செய்துள்ளோம். காலம் குறைவு தான். ஆனால் ஆற்றியுள்ள பணிகள் அதிகம். தமிழ்நாட்டில் வீரத்துடன் விவேகத்துடனும் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. தொழில் வளர்ச்சி, சமூக மாற்றம், கல்வி மேம்பாடு ஆகிய அனைத்தும் ஒரே நேரத்தில் நடக்க வேண்டும்.
அரசியலாக்க விரும்பவில்லை
கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி 2023-24 ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கான தொடக்க உரையை ஆற்றினார். தமிழ்நாடு அரசின் பன்முக கூறுகளை விளக்கியும், அரசு எந்த வகையில் சிறப்பாக செயல்படுகிறது என்பதை பாராட்டியும், எதிர்காலத்தில் செயல்படுத்தக்கூடிய முன்னேற்ற நடவடிக்கைகள் குறித்து உரையாற்றினார். அன்று நிகழ்ந்த சம்பவங்களை மீண்டும் பேசி நான் அரசியலாக்க விரும்பவில்லை.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியின் மாண்பை காட்டவும், வலிமையை உணர்த்தவும் நான் என் சக்தியை மீறியும் செயல்படுவேன் என காட்டினேன்” என தெரிவித்துள்ளார்.