TN Goverment: சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பீக் அவர்ஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தொடர் கோரிக்கை:
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ம் தேதி மின்கட்டணத்தை தமிழ்நாடு அரசு உயர்த்தியது. சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் ரூ.550 ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டது. அதேபோல, பீக் ஹவர் கட்டணமும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது. அதாவது, பீக் ஹவர் என்று சொல்லக்கூடிய அதிக பயன்பாட்டு நேரமான காலை 6 மணி முதல் 10 வரை 15 சதவீதமும், மாலை 6 மணி முதல் 10 மணி வரை 20 சதவீதமும் மின்கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த கட்டண உயர்வு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், இந்த கட்டண உயர்வால் தாங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.
அதாவது, பீக்-ஹவர் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். அதுபோல், 12 கிலோவாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்கு பதிலாக 3-ஏ என்ற அட்டவணை மூலம் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்க வேண்டும். வெல்டிங் இணைப்புகளை 3-பி என்ற சிறப்பு அட்டவணையில் இருந்து 3-ஏ அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
பீக் ஹவர் மின் கட்டணம் குறைப்பு:
இந்த நிலையில், அதில் சில முக்கிய கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை ஒன்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, சிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று பீக் அவர்ஸ் கட்டணத்தை குறைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும் மின் பயன்பாட்டை பொருத்து 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதம் வரை கட்டணம் குறைப்பதாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. மேலும், சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க்கிங் கட்டணத்தை 50% வரை குறைப்பதாகவும் அறிவித்துள்ளது. இதனால் 196.10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க