தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
நாளை (நவம்பர் 12) இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் புத்தாடைகள், பட்டாசுகள் வாங்க கடைவீதிகளில் குவிந்துள்ளதால் தீபாவளி வியாபாரமும் களைகட்டியுள்ளது. இப்படியான நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி
மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் சிறப்பு மிக்க பண்டிகையாம் தீபாவளித் திருநாளை, நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் அரக்கனை திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த நாள், இருள் விலகி ஒளி பிறக்கும் தினமாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் சுடர்விட்டு பிரகாசிக்கும் தினமாகவும் மக்களால் கருதப்படுகிறது.தீபாவளித் திருநாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி, வளமான வாழ்விற்கு இறைவனை வழிபட்டு, உற்றார் உறவினர்களுக்கு இனிப்புகளை வழங்கி, விருந்துண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள்.
தித்திக்கும் இந்த தீபாவளித் திருநாளில், துன்பங்கள் நீங்கி என்றும் இன்பங்கள் மலரும் தீப ஒளியாக இந்த தீபாவளி அமையட்டும்; மக்கள் அனைவரது வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும்; இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். மக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்று மனதார வாழ்த்தி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை மகிழ்ச்சியோடு உரித்தாக்கிக்கொள்கிறேன்.
ஓ.பன்னீர்செல்வம்
உலகில் மண்டிக் கிடக்கும் இருளை நீக்கி ஒளியை ஏற்றிடும் தீபத் திருநாளாம் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் எனது அன்பிற்குரிய தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களை பெருந்துன்பத்திற்கு ஆளாக்கிய நரகாசுரன் எனும் கொடிய அரக்கனை மகாலட்சுமி துணையுடன் திருமால் அழித்த தினமே தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த நன்னாளில் தங்களின் இல்லங்களை அலங்கரித்தும்; தீபங்களை ஏற்றி வைத்தும்; புத்தாடைகளை அணிந்தும்; உற்றார் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்தும்; இனிப்புகளை பகிர்ந்து உண்டும்; உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் தீபாவளி பண்டிகையைக் பொதுமக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த தீப ஒளித் திருநாளில் சமுதாயத்தின் அங்கமாகிய மக்களின் உள்ளங்களில் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகட்டும்; அநீதி அகன்று நீதி நிலைக்கட்டும்; அநியாயம் அழிந்து நியாயம் நிலைநாட்டப்படட்டும்; அனைவரும் உயர்வும், வளமும் பெற்று ஒற்றுமையுடன் வாழட்டும் என்று எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்தித்து அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.
கமல்ஹாசன்
விடிவானில் ஒளிர்மீன்கள்
விண்ணெல்லாம் ஒளிரட்டும்
ஐப்பசியின் மழைப்பொழிவில்
அகமெல்லாம் மலரட்டும்
ஆகாயம் பார்த்திருக்கும்
அருமைநிலம் செழிக்கட்டும்
தீபாவளி நாளில்
திசையெட்டும் பொலியட்டும்!