Pudukottai Leopard:  புதுக்கோட்டையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.


புதுக்கோட்டையில் சிறுத்தை நடமாட்டமா? 


புதுக்கோட்டை மாவட்டம் மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் பரவின. குறிப்பாக சமூக வலைதளங்களில் பலர், சிறுத்தை நடமாட்டம் குறித்து பதிவிட்டு இருந்தனர். தாங்கள் சிறுத்தையை கண்டதாகவும், சிலர் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர்.  இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் அச்சத்துடனே வசித்து வந்தனர். உயிருக்கு பயந்து இரவு நேரங்களில் வீட்டை வெளியேறுவதையும், தனியாக செல்வதையும் தவிர்த்து வந்தனர்.


வனத்துறை சோதனை:


இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என சோதனையில் ஈடுபட்டனர். வனத்துறையினர் 5 குழுக்களாக பிரிந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காவல்துறையினரும் இந்த பணியில் ஈடுபட்டனர். தீவிர சோதனைக்குப் பிறகு மழவராயன்பட்டி, மாஞ்சான்விடுதி பகுதிகளில் சிறுத்தை நடமாட்டத்திற்கான தடயம் எதுவுமே கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளது.


வனத்துறை விளக்கம்:


சோதனையை தொடர்ந்து, குறிப்பிட்ட பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் ஏதும் இல்லை என கூறியுள்ள வனத்துறையினர், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை யாரும் பரப்பவேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர். மேலும், தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.