TN Fishermen Arrest: தமிழக மீனவர்களுக்கு எதிரான தொடர் கைது நடவடிக்கை, மீன்வ குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக மீனவர்கள் 17 பேர் கைது:
ராமேஸ்வரத்தில் மீன் பிடிக்க சென்றவர்கள் தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அவர்களை கைது செய்துள்ளது. 17 மீனவர்களை சிறைபிடித்ததுடன், அவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்ட பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை தொடர்வது தமிழக மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி வலியுறுத்தியது என்ன?
அண்மையில் இந்தியா வந்திருந்த இலங்கை அதிபர் அனுரகுமாரா திசநாயக்கேவிடம், தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக பிரதமர் மோடியே பேசி இருந்தார். அதன்படி, ”மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்கொலைக்கும் காரணியாக உள்ள எல்லை மீறி மீன் பிடிப்புக்கான கைது பிரச்சனைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண வேண்டியதன் அவசியம் குறித்து இருவரும் பேசினர்.
இதையடுத்து, இனி மீனவர்கள் விவகாரத்தில் எந்த ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கையோ அல்லது வன்முறையோ இல்லாமல் நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலினும் இதனை வரவேற்று இருந்தார். இந்நிலையில், மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பத் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் கடலில் மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினரும் தாக்குதல் நடத்திய சம்பவங்களும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.