மின்சார பணிகளை மேற்கொள்ளும்போது மின் ஊழியர்கள் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் விபத்திற்கு மின் ஊழியரக்ளே பொறுப்பு என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 




கடந்த சில நாட்களுக்கு முன் மின் வாரிய செயல்பாடுகள், மின் விநியோகம் டொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வு கூட்டத்தில், பாதுகாப்பு விதிகளை பின்பற்றாதது, தேவையான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் பணிகளை மேற்கொள்வது, முறையான கண்காணிப்பு இல்லாதது, தனிமைப்படுத்தாமல், பூமியை பொருத்தாமல் வேலை செய்வது, ஏபி சுவிட்சுகளில் திறந்திருக்கும் பிளேடுகளை சரிபார்க்காமல் இருப்பது உள்ளிட்டவற்றால் விபத்துகள் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டதாக மின் வாரியத்தின் முதன்மை பொறியாளர் தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.


இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில், “ இனி வரும் காலங்களில் அனைத்து பணியாளர்களும் விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என  மின்வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பணியாளர்களால் பணிகளை மேற்கொள்வதற்கு முன், தளத்தில் உள்ள மேற்பார்வை ஊழியர்கள் (LI/FM/AE) பாதுகாப்பு உபகரணங்களின் பயன்பாட்டை சரிபார்த்து, சரியான தனிமைப்படுத்தல் மற்றும் பூமியை (earthing) உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக பணியாளர்கள் பணியின் போது எர்த்ரோட் பயன்படுத்தும் புகைப்படத்தைப் பதிவேற்ற வேண்டும். இதற்கான பிரத்யேக செயலியை பயன்பாட்டிற்கு கொண்டுவர தகவல் தொழில்நுட்ப துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செயலி செயல்பாட்டிற்கு வரும் வரை அந்தந்த மின்சார பிரிவின் வாட்ஸ்அப் குழுவில் பதிவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்காமல் விபத்து ஏற்பட்டால் பணியாளர்களே பொறுப்பு எனவும் மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.