மத்திய அரசு நேரத்திற்கேற்ப மின்கட்டணம் உயர்த்தி அமல்படுத்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நேரத்திற்கேற்ப மின் கட்டணத்தை உயர்த்தும் மத்திய அரசின் திருத்தம் வீடுகளுக்கு பொருந்தாது என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 


இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தெரிவித்துள்ளதாவது: 


”1.மாலை நேர  மின்  கட்டணம்: 
மாலை நேர உச்ச காலங்களில் 20% மின் கட்டணம் கூடுதலாக உயர்த்தி நிர்ணயம் செய்ய வேண்டும் இது விதி தமிழகத்தில் மின் கட்டணம் நிர்ணயம் செய்யும் அதிகாரம் தமிழக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு உள்ளது. தற்போதுள்ள மின் கட்டண ஆணைப்படி உச்ச நேர கால அளவு கட்டணம் வீட்டு நுகர்வோர்களுக்கு  நிர்ணயம் செய்யப்படவில்லை.  எனவே இந்தத் திருத்தத்தால் தமிழகத்தில் வீட்டு நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.
 
2. நுண் மானி (Smart Meters)  பொருத்திய பிறகு தண்டத்தொகை வசூல் செய்வது குறித்து : தற்போது தண்டத்தொகை ஏதும் நிர்ணயம் செய்யப்படாததால் நுகர்வோர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்” இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது”


முன்னதாக மின்சாரம் தொடர்பான சட்டம் ஒன்றில் மத்திய அரசு திருத்தம் செய்தது. மின்சார(நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020இல் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டதன் மூலம் மின்சாரத்திற்கு செலுத்தும் கட்டணம், நாளின் நேரத்திற்கு ஏற்ப மாறுபடும். 


அதன்படி, மின்சாரத்திற்கான அதிக தேவை இருக்கும் நேரங்களில் (Peak Hours – உதாரணமாக, காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 6 முதல் இரவு 10 மணி வரை) மின் கட்டணம் வழக்கத்தை விட 10 முதல் 20 சதவீதம் அதிகமாக வசூலிக்கப்படும்.


அதே சமயம், சூரியஒளி கிடைக்கும் சாதாரண நேரங்களில் (solar Hours) தற்போது வசூலிக்கப்படும் சாதாரண கட்டணத்தை விட 10% -20% குறைவாக வசூலிக்கப்படும்.  சூரியஒளி கிடைக்கக் கூடிய நேரங்கள் எது என்பதை  அந்தந்த மாநில மின்சார ஒழுங்கு முறை ஆணையம்  புவியியல் அமைப்புக்கு ஏற்ப தீர்மானித்து கொள்ளும்.


வரும் 2024 ஏப்ரல் 1 முதல் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு இந்த புதிய கட்டண நடைமுறை அமலுக்கு வருகிறது. 2025 ஏப்ரல் 1 முதல் விவசாய நுகர்வோர் தவிர மற்ற அனைத்து நுகர்வோருக்கும் இந்த கட்டணம் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட உடனேயே, ஸ்மார்ட் மீட்டர் நுகர்வோருக்கு இந்த கட்டணம் அமலுக்கு வந்துவிடும். இந்த சட்டதிருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.