தமிழ்நாடு முழுவதும் மாண்டஸ் புயல் காரணமாக மழை நேற்று முதல் பெய்து வருகிறது. தமிழ்நாட்டிற்கும் டிசம்பர் மாதத்திற்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது. டிசம்பர் மாதத்தை வெற்றிகரமாக கடப்பதற்குள் தமிழ்நாடு மக்கள் ஒரு வழியாகி விடுகின்றனர். குறிப்பாக, சென்னைவாசிகளுக்கு டிசம்பர் மாதம் என்றாலே மறக்க முடியாத மாதமாகவே மாறி வருகிறது.


கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மறக்க முடியாத இயற்கை சீற்றங்கள் அனைத்தும் இந்த டிசம்பர் மாத காலகட்டத்திலே நிகழ்ந்துள்ளது.


சுனாமி (டிசம்பர் 26, 2004)


கொரோனாவிற்கு முன்பு உலகம் முழுவதும் மறக்க முடியாத பேரிடராக இருந்தது சுனாமி. 2004ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி கடலில் ஏற்பட்ட ஆழிப்பேரலை என்ற சுனாமியால் இந்த ஒட்டுமொத்த உலகமும் சோகத்தில் மூழ்கியது. லட்சக்கணக்கான மக்கள் சில நிமிடங்களில் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் சென்னையிலும், கடலூரிலும், நாகப்பட்டினத்திலும், வேதாரண்யத்திலும் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் இன்றளவும் மக்கள் மனதில் மறக்க முடியாத வடுவாக அமைந்துள்ளது.


தானே புயல் (டிசம்பர் 2011)


தமிழ்நாட்டையும், பாண்டிச்சேரியையும் ஒரு சேர புரட்டிப்போட்ட புயல் தானே புயல் ஆகும். மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்துடன் பலத்த சூறாவளிக் காற்றுடன், கனமழையுடன் கரையை கடந்த இந்த புயலால் கடலூரில் 9 பேரும், பாண்டிச்சேரியில் 7 பேரும், சென்னையில் 2 பேரும் உயிரிழந்தனர். தானே புயல் மிக கடுமையாக கடலூரைத் தாக்கியது. கடலூரில் கட்டிடங்கள், மின் விநியோக கட்டமைப்பு, மரங்கள், வேளாண் நிலங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த பேரிடர் சம்பவம் நிகழ்ந்ததும் டிசம்பர் மாதத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


2015 பெருவெள்ளம் ( டிசம்பர்)


சென்னையை அதளபாதாள நிலைக்கு கொண்டு சென்ற ஒரு இயற்கை பேரிடராக இந்த பெருவெள்ளம் இன்றும் கருதப்படுகிறது. 2015ம் ஆண்டு தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக இந்த நிலை ஏற்பட்டது. நவம்பர் மாத இறுதியில் அடுத்தடுத்து பெய்த 2 பெருமழைகளின் பாதிப்பு மக்களை அவதிக்குள்ளாக்கி கொண்டிருந்த நிலையில், டிசம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 2-ந் தேதி வரை பெய்த மழை ஒட்டுமொத்த சென்னை மக்களின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது.


தாம்பரம், முடிச்சூர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், அமைந்தகரை என சென்னையின் புறநகரும், சென்னையும் மழைநீரில் மூழ்கியதாலும், அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாலும் மக்கள் நடுத்தெருவிற்கு வரும் நிலை ஏற்பட்டது. சாலைகளிலும் தேங்கிய தண்ணீரால் மக்கள் உணவுக்கும், தண்ணீருக்கும் கையேந்தும் பரிதாப நிலை ஏற்பட்டது. மின்சாரம் இல்லாமல், குடிநீர் இல்லாமல், உணவு இல்லாமல் ஒட்டுமொத்த சென்னையும் அவதிப்பட்டது. சென்னையை விட பன்மடங்கு பாதிப்பு கடலூரில் ஏற்பட்டது. 2016ம் ஆண்டு புத்தாண்டே மக்களுக்கு நிம்மதியில்லாமலே தொடங்கியது.


வர்தா புயல் ( 2016 டிசம்பர்)


2015ம் ஆண்டு பெருவெள்ளத்தின் பாதிப்பில் இருந்தே முழுவதும் மீள முடியாமல் அவதிப்பட்டு வந்த சென்னை மக்களுக்கு அடுத்த பேரிடியாக அமைந்தது வர்தா புயல் ஆகும். அதுவும் 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த புயல் சென்னையை புரட்டி எடுத்தது. இந்த புயல் சென்னை அருகே டிசம்பர் 12-ந் தேதி கரையை கடந்தது. வர்தா புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. மேலும், புயல் கரையை கடந்தபோது வீசிய பலத்த சூறாவளி காற்று காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் மரங்கள் சாய்ந்தது. 30 ஆயிரம் மின்கம்பங்கள், 600 டிரான்ஸ்பார்மர்கள், 70 ஆயிரம் வீடுகள், படகுகள், வேளாண் நிலங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த புயல் பாதிப்பில் இருந்தும் சென்னை போராடி மீண்டு வந்தது.


ஒக்கி புயல் (2017 டிசம்பர்)


சென்னை பெருவெள்ளம், வர்தா புயலால் வேதனையில் இருந்த தமிழக மக்களை மீண்டும் வேதனை்ககு ஆளாக்குவதற்காகவே வந்தது ஒக்கி புயல். ஒக்கி புயல் சென்னையை குறி வைக்காமல் கன்னியாகுமரியில் கோரத்தாண்டவம் ஆடியது. கன்னியாகுமரியில் கடலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகினர். பலர் கடலிலே உயிரிழந்தனர். திசை மாறி வேறு நாட்டிற்குச் சென்றனர். கன்னியாகுமரியில் தென்னை, வாழைத் தோப்புகள் ஆயிரக்ணக்கான ஏக்கரில் நாசமாகின. கன்னியாகுமரி, திருநெல்வேலி பகுதிகளில் கோரத்தாண்டவம் ஆடிய ஓகி புயல் பாதிப்பை பிரதமர் மோடியே நேரில் சென்று ஆய்வு செய்தார்.


மாண்டஸ் புயல் (2021)


சுனாமி, பெருவெள்ளம், வர்தா என பல பேரிடர்களை பார்த்த சென்னைக்கு தற்போது அடுத்த சவாலாக அமைந்திருப்பது இந்த மாண்டஸ். மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் விடாமல் மழை பெய்து வருகிறது. இந்த புயல் சென்னை- மாமல்லபுரம் அருகே கரையை கடக்க உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


டிசம்பர் மாதம் என்றாலே தமிழ்நாட்டிற்கும், குறிப்பாக சென்னைக்கும் ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தும் மாதமாகவே மாறி வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு பேரிடரையும் சென்னை உள்பட தமிழக மக்கள் போராடி கடந்து வருகின்றனர். மேற்கண்ட புயல்கள் மட்டுமின்றி கஜா மற்றும் நிவர் புயலாலும் தமிழ்நாடு நவம்பர் மாதங்களில் மோசமான பாதிப்பை சந்தித்தது.