தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழத்த தாழ்வு மண்டலமானது ”மாண்டஸ்” புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 520 கி.மீ. தொலைவில் நிலைக்கொண்டுள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே நாளை நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.  இதன் காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும்.


கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரியில் நாளை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், சென்னை, வேலூர்,தி.மலை.கள்ளக்குறிச்சி,கடலூர் தருமபுரி, சேலம், நாமக்கல்,திருச்சி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 


விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் பகுதி கடற்கரை ஓரம் அமைந்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் பருவ மழை புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களின் பொழுது இங்கு அதிகப்படியான பாதிப்புகள் உண்டாகிறது . இந்நிலையில் தற்பொழுது வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள மான்டஸ் புயலின் காரணமாக மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக மரக்காணம் பகுதி கடலில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு அலைகளின் சீற்றம் ஆக்ரோஷமாக உள்ளது.


இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 கிராம மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தடை விதிக்கப்பட்டுள்ளது .இதுபோல் மீனவர்கள் தங்களது மீன்பிடி சாதனங்களான பைபர் படகு வலை போன்றவைகளை பாதுகாப்பான இடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் கடற்கரை ஓரமுள்ள மீனவர்கள் கூட மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் மூலம் மீனவ கிராமங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது, இந்த எச்சரிக்கையின் காரணமாக மீனவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மீனவ கிராம பஞ்சாயத்து குழுவினர் செய்து வருகின்றனர்.