தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின் நேற்று தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அமைச்சரவையிலும் செந்தில் பாலாஜி மற்றும் நாசருக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர்:
நீண்ட நாட்களாகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை கட்சியில் வலுவாக எழுந்து வந்த நிலையில், நேற்று அதிகாரப்பூர்வமாக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு குமாரசாமி ராஜா, ராஜகோபாலச்சாரி, காமராஜர், பக்தவச்சலம், அண்ணாதுரை,நெடுஞ்செழியன், கருணாநிதி, எம்.ஜி.ஆர்., வி.என்,ஜானகி, ஜெயலலிதா,ஓ,பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் என பலர் முதலமைச்சராக இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு இதுவரை 3 பேர் மட்டுமே துணை முதலமைச்சராக பதவி வகித்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு துணை முதல்வர்களாக மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருக்கு அடுத்தபடியாக தற்போது உதயநிதி ஸ்டாலினும் பொறுப்பேற்கிறார்.
முதன்முதலில் மு.க.ஸ்டாலின்:
தி.மு.க.வில் தனது அயராத உழைப்பு, சுற்றுப்பயணம் ஆகியவற்றின் மூலமாக அமைச்சராக உயர்ந்த மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று 2006ம் ஆண்டு அமைந்த தி.மு.க. ஆட்சியில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, கருணாநிதியின் இரண்டு மகன்களான மு.க.ஸ்டாலின் மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் மோதல் வலுவாக இருந்த சமயத்தில், மிகவும் பரபரப்பான அரசியல் சூழலில் 2009ம் ஆண்டு மே 29ம் தேதி தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
தமிழ்நாட்டிற்கு நியமிக்கப்பட்ட முதல் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே ஆவார். அவர் 2011ம் ஆண்டு மே 15ம் தேதி வரை தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பு வகித்தார். அதன்பின்பு, தி.மு.க. எதிர்க்கட்சியாகவே இருந்தது. பின்னர், எதிர்க்கட்சித் தலைவர், தி.மு.க. செயல் தலைவர், தி.மு.க. தலைவர் ஆகிய பதவிகளை கடந்து தற்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம்:
தமிழ்நாட்டின் இரண்டாவது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆவார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பல கட்ட மோதலுக்கு பிறகு 2017ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்தனர். இதையடுத்து, அப்போது முதலமைச்சராக பதவி வகித்த எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் 2017ம் ஆண்டு ஆகஸ்ட் 21ம் தேதி பதவியேற்றார். ஜெயலலிதாவின் விசுவாசி என்று பெயரெடுத்த ஓ.பன்னீர்செல்வம் 2021ம் ஆண்டு மே 6ம் தேதி வரை துணை முதலமைச்சர் பதவி வகித்தார்.
உதயநிதி ஸ்டாலின்:
இந்த நிலையில், தமிழ்நாட்டின் 3வது துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுள்ளார். தயாரிப்பாளர், நடிகராக திரைத்துறையில் அசத்திய உதயநிதி ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராக கடந்த சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக தேர்வானார்.
சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், தி.மு.க.வின் தற்போதைய ஆட்சி முடிவடைவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் அவர் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு அ.தி.மு.க., பா.ஜ.க. மட்டுமின்றி நடிகர் விஜய்யின் த.வெ.க.வும் இணைந்து மிகவும் வலுவான போட்டிக் களமாக மாற்றியிருக்கும் சூழலில், உதயநிதி ஸ்டாலின் தற்போது துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இது வருங்கால தி.மு.க.வை அவர் வழிநடத்தும் வகையில் வழங்கப்பட்ட பொறுப்பாகவே அரசியல் நிபுணர்களால் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.