தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை நியமிக்கப்பட்டார். தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டதும் அவருக்கு கூடுதல் பொறுப்புகளும், அதிகாரங்களும் கிடைத்துள்ளது.



அமைச்சரவையில் 3வது இடத்தில் உதயநிதி:


இந்த நிலையில், துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் பக்கத்தில் அமைச்சர்களுக்கான பட்டியலில் கிடுகிடுவென ஏற்றம் கண்டுள்ளார். துணை முதலமைச்சராக நியமிக்கப்படுவதற்கு முன்பு அமைச்சர்கள் பட்டியலில் உதயநிதி ஸ்டாலின் 10வது இடத்தில் இருந்தார்.

துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்ட பிறகு தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சர்களுக்கான பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளார். அவர் வசம் பொதுத்துறை, காவல்துறை, பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட முக்கிய துறைகள் அவர் வசம் உள்ளது. அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் உள்ள மூத்த அமைச்சரான துரைமுருகனிடம் நீர்வளம், கனிமங்கள், சுரங்கங்கள், சிறுபாசன துறை வசம் உள்ளது.


துணை முதலமைச்சருக்கு அடுத்த இடத்தில் யார்? யார்?


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் மற்றும் ஊரகக்கடன்கள் துறை அவர் வசம் உள்ளது. 4வது இடத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, 5வது இடத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளனர். உயர்கல்வித்துறையில் இருந்து வனத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட பொன்முடி அமைச்சரவை பட்டியலில் 6வது இடத்தில் உள்ளார். எ.வ.வேலு 7வது இடத்திலும், மூத்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 9வது இடத்திலும் உள்ளனர். செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் 21வது இடம் வழங்கப்பட்டுள்ளது.


புதியதாக அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியனுக்கு 27வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு அமைச்சரவை பட்டியலில் 28வது இடம் அளிக்கப்பட்டுள்ளது.


பெண் அமைச்சர்களுக்கு எத்தனையாவது இடம்?


அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இரண்டு பெண் அமைச்சர்களில் ஒருவரான கீதா ஜீவனுக்கு 16வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மற்றொரு பெண் அமைச்சரான கயல்விழிக்கு அமைச்சர்களின் பட்டியலில் கடைசி இடமான 35வது இடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு துணையாக இனி வரும் நாட்களில் உதயநிதி ஸ்டாலினும் அரசின் முக்கிய ஆலோசனைகளில் ஈடுபட உள்ளார். துணை முதலமைச்சரான உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அனுமதியுடன் புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


தி.மு.க.வின் அடுத்த கட்ட தலைவராக உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தும் பொருட்டு இந்த அதிரடி மாற்றங்களை ஆட்சியிலும் தி.மு.க. அரசு மேற்கொண்டுள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.