தமிழ்க் கனவு நிகழ்ச்சி இனி ஆண்டுதோறும் அனைத்துக் கல்லூரிகளிலும்  நடைபெறும் என்று, முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


ஸ்டாலின் பேச்சு:


சென்னை கோட்டூர்புரத்தில் நடைபெற்ற,  மாபெரும் தமிழ்க் கனவு 100வது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, அண்ணா என்ற ஒற்றைச்  சொல்தான் லட்சக்கணக்கான இளைஞர்களை, தமிழ்ச் சொந்தங்களை இணைக்கும் ஒற்றுமைச் சொல்லாக மாறியது. பேரறிஞர் அண்ணாவின்  உரைகள் ஒவ்வொன்றும் , அறிவுப்பூர்வமானவை, கருத்தாழ மிக்கவை.  1961-ல் தலைப்பு இல்லாத நாடாக  தமிழ்நாடு திகழ்வதா என்ற தலைப்பில் அறிஞர் அண்ணா பேசினார். அண்ணாவும், தம்பியும், உடன் பிறப்பும் குடும்ப பாச உணர்வை  ஊட்டும் சொற்கள்.


 


அண்ணா புகழ்:


பேரறிஞர் அண்ணாவோட பேச்சுக்களை மாலை நேரத்துக் கல்லூரிகள் என்று சொல்லுவார்கள். சென்னை கன்னிமாரா நூலகத்தில் இருக்கின்ற பெரும்பாலான புத்தகங்களைப் படித்தவர் என்று பெயர் பெற்ற ஒரு அறிஞர் தான் நம்முடைய பேரறிஞர் அண்ணா. தான் படித்த அனைத்தையும் தன்னோட மொழியில் இந்த நாட்டுக்குச் சொன்னார். பேரறிஞர் அண்ணா அவர்கள் இளைஞர்களிடத்தில் தான் அதிகமாக பேசுவார். அதுவும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில்தான் அதிகமாக பேசுவார். அவரோட பேச்சுக்கள் எல்லாம் ஏதாவது தலைப்பை
மையப்படுத்திதான் இருக்கும் என பாராட்டி பேசியதோடு,  இனி ஆண்டுதோறும் அனைத்துக் கல்லூரிகளிலும்  தமிழ்க் கனவு நிகழ்ச்சி நடைபெறும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்தார்.


மாணவர்களுக்கு வேண்டுகோள்:


கல்விதான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து. அந்த சொத்தைச் சேகரித்துவிட்டால் மற்ற சொத்துகள் தானாக வந்து சேர்ந்துவிடும். எனவே பள்ளிக் காலத்தில், கல்லூரிக் காலத்தில் படிப்பில் இருந்து
கவனச் சிதறல்கள் இருக்கக் கூடாது. எந்தச் சூழலிலும் தவறான பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடாதீர்கள். அது உங்கள் உடல் நலனுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டு நலனுக்கும் கேடு விளைவிக்கும்.


அதேபோல் இணையத் தளங்களை, சமூக வலைத்தளங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்துங்கள். குறிப்பாக மாணவிகள், நிச்சயமாக படித்தாக வேண்டும். பட்டங்கள் வாங்கத் தவறக் கூடாது. வாங்கிய பட்டத்துக்குத் தகுதிவாய்ந்த வேலைகளுக்கு நிச்சயம் செல்லவேண்டும். உயர் பதவிகளை அடைய வேண்டும். தங்களின் பொருளாதாரத் தேவையை தாங்களே பணியாற்றிப் பெறும் தகுதியை அடைய வேண்டும்.


மாணவராக இருந்தாலும் - மாணவியாக இருந்தாலும் தைரியம் - துணிச்சல் - தன்னம்பிக்கை - அஞ்சாமை ஆகியவை வேண்டும். சமூகநீதி - சமநீதி - சமதர்மம் – சகோதரத்துவம் ஆகிய நெறிமுறைகளைப் பின்பற்ற
வேண்டும். அதற்காக உழைக்க வேண்டும்! எனக்கு ஒரு மாபெரும் கனவு இருக்கிறது. எல்லார்க்கும் எல்லாம் 
என்பதுதான் அந்தக் கனவு. கனவு என்றால், கண்ணை மூடிக் கொண்டு கற்பனை உலகில் மிதப்பது
அல்ல. ஒரு லட்சியத்தை நெஞ்லேந்தி நாளும் உழைப்பது. அந்த உழைப்பைத்தான் நாள்தோறும் நான் இந்த
தமிழ்ச்சமுதாயத்திற்காக தந்துகொண்டு இருக்கிறேன்” என ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.