அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு அஞ்சி எல்லாம் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளாது என, அக்கட்சியின் தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.


ஸ்டாலின் பேட்டி:


ஆங்கில பத்திரிகைக்கு பேட்டியளித்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல், ஆளுநர் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன்படி, இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து நீக்குவதாக கூறிய ஆளுநர், சிறிது நேரத்திலேயே அந்த உத்தரவை திரும்பப் பெற்றார். எதனால் அவர் அப்படி செய்தார் என நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.


எரிச்சலடைந்த ஆளுநர் - ஸ்டாலின்


அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் “எனது தலைமையிலான திமுக அரசு எந்தவித பிரச்னையும் இன்றி இயங்கக் கூடாது. மக்களுக்கான நலத்திட்டங்களை அமல்படுத்தக்கூடாது என்பது தான் ஆளுநரின் நோக்கமாக உள்ளது. அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மூலம் தமிழ்நாட்டை பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்ட இரண்டாவது மாநிலமாக மேம்படுத்தியுள்ளோம். ஆளுநரால் இதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நாட்டிற்கும், மக்களுக்கும், நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் அவருக்கு இல்லை. அதனால் தான், தமிழக அரசுடன் காரணமே இல்லாத பல்வேறு வாதங்களில் ஈடுபடுகிறார்.


உதாரணமாக  தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்க அவர்களுக்கு அழைப்பு விடுக்கவும் நான் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் சென்று இருந்தேன். அப்போது, சுற்றுப்பயணங்கள் மூலம் மட்டும் முதலீடுகள் வந்துவிடாது என ஆளுநர் பேசுகிறார். இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன? முதலீட்டாளர்கள் மத்தியில் தமிழ்நாடு தொடர்பான மோசமான பிம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகள் கிடைக்க கூடாது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் உருவாகக் கூடாது என விரும்புகிறார். தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள ஆளுநரின் பேச்சு என்பது, தமிழக அரசின் செயல்பாடுகளால் அவர் எரிச்சலடைந்து இருப்பதை காட்டுகிறது. அடிப்படை ஆதாரங்கள் இல்லாத மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரான அவரது பேச்சுகள் சமூகத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்துவதோடு, சமூக நல்லிணக்கத்தையும் பாதிக்கிறது. அரசியல் சாசனப்படி நியமிக்கப்பட்ட அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என அவருக்கே தெரியும். இருந்தாலும் தமிழக மக்கள் மற்றும் அவரது நலன்களின் பொறுப்பற்று விளையாடி வருகிறார்” என ஸ்டாலின் விளக்கமளித்தார்.


பாஜக தலைமையிலான மத்திய அரசின் கட்டளைகளின்படி ஆளுநர் ரவி செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் மத்திய உள்துறை அமைச்சரின் ஆலோசனையின் பேரில் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்த கடிதம் தொடர்பாக அட்டர்னி ஜெனரலின் கருத்தை கேட்க முடிவை நிறுத்தி வைத்து இருப்பதாக கூறுகிறாரே?


இதற்கு பதிலளத்த முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அரசின் கட்டளைகளுக்கு இணங்கி அவர் செயல்படுகிறார் என்பது தொடர்பாக எல்லாம் நான் பேச விரும்பவில்லை. அதேநேரம், ஒரு அமைச்சரை நியமிப்பதற்கும், அவரை பதவி நீக்கம் செய்வதற்கும் ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மத்திய அரசு அவரை கட்டுப்படுத்த தவறினால், தமிழக மக்களின் கோபத்தை அவர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றார்.


அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிநீக்கம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என கூறும் நீங்கள், அதிமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என ஆளுநரை வலியுறுத்தினீர்களே..!இது இரட்டை நிலைப்பாடு ஆகாதா?


பரவலாக கேட்கப்படும் இந்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் “அத்தகைய கோரிக்கையை முன்வைப்பது என்பது அரசியல் நடவடிக்கை. ஆனால், ஆளுநர் எப்போது அரசியல்வாதியாக செயல்படக்கூடாது.  அவர் சட்டப்படி செயல்படவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜியை பாஜகவினர் போன்று வேண்டுமென்றே குறிவைத்து ஆளுநர் திட்டமிட்டு செயல்படுகிறார். வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையால் வழக்குகளுக்கு ஆளான அதிமுக அமைச்சர்கள் பதவியில் இருந்து மக்களால் நீக்கப்பட்ட பிறகும் கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், அரசியல் காரணங்களுக்காக செந்தில் பாலாஜி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வரம்பு  மீறி அமைச்சர் கைது செய்யப்பட்டார். 9 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கில் தற்போது திடீரென கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதும், 18 மணி நேரத்திற்கு ஒரு அறையில் அடைத்து வைத்து தொல்லை செய்யப்பட்டதும் ஏன்? அவர் ஒரு அமைச்சர், மக்கள் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் அவரை அவசரகதியில் கைது செய்யவும், அறிக்கை வெளியிடவும் என்ன காரணம்? இதய கோளாறு பிரச்னைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டிய சூழலில் செந்தில் பாலாஜி இருந்தும், அவர் நாடகமாடுவதாக மனிதாபிமானமற்ற முறையில் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது. மருத்துவர்களின் அறிக்கையையே நம்ப மறுத்தது. தனியார் மருத்துவமனைக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்தது. இத்தகைய மனித உரிமைகளை மீறிய செயல்களை எதிர்க்கிறோம். கைது நடவடிக்கை மூலம் அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது” என சாடினார்.


தார்மீக அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீங்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறதே என கேட்கப்பட்ட கேள்விக்கு “நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் அமைச்சர்கள் மீது நிரூபணம் செய்யப்படாத பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மறைந்த ஜெயலலிதாவும் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானாலும் குற்றவாளி என உறுதி செய்யப்படும் வரை முதலமைச்சராக தொடர்ந்தார். பாஜக அமைச்சர்களுக்கு எதிராகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே தார்மீக அடிப்படையில் என்பது சரியாகாது. பாஜகவின் அரசியல் எதிரிகளை ஓரம்கட்டுவதற்காக அக்கட்சியின் ஒரு கிளையாக அமலாக்கத்துறை மாறி இருப்பதால், செந்தில் பாலாஜி விவகாரத்தில் நான் சரியான நிலைப்பாட்டை தான் எடுத்து இருக்கிறேன்” என கூறினார்.


ஆளுநர் ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பதை வரவேற்கிறீர்களா? என்ற கேள்விக்கு “ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்பது அல்ல பிரச்னை இங்கு. ஆளுநரே வேண்டாம் என்பதே எங்களின் நிலைப்பாடு” என்றார்.


தொடர்ந்து பாஜகவிற்கு எதிராக செயல்படுவதாலும், தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதாலும் பாஜகவால் நீங்கள் இலக்காக்கப்படுவதாக நினைக்கிறீர்களா என கேட்க “அது தான் உண்மை. தேசிய தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்கள் என்னை சந்திக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என நான் வலியுறுத்தி வருகிறேன்.  காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி என்ற ஆலோசனையை நான் நிராகரித்தேன். காங்கிரஸையும் உள்ளடக்கிய கூட்டணியால் தான் பாஜகவை வீழ்த்த முடியும். இது பாஜகவை கோபமாக்கியதுடன், பாட்னாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டம் அவர்களை அச்சமடையவும் செய்துள்ளது. இதை விளக்கும் விதமாகதான் மத்தியபிரதேசத்தில் நடைபெற்ற கூட்டத்தில், பிரதமர் மோடி திமுகவை சாடி பேசியுள்ளார். திமுக அமைச்சர்களை பாஜக குறிவைத்து செயல்படுவதன் மூலம் நாங்கள் எங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குலைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் என்பது எங்களுக்கும் தெரியும், ஆனால் அவர்களின் செயல்பாட்டை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பாஜக உணர வேண்டும்” என விரிவாக பதிலளித்தார்.


மோடி பாஜகவின் பிரதமர் முகமாக இருக்கையில் எதிர்க்கட்சிகளில் அப்படி ஒரு நபரே இல்லாமல், அவர்களை வீழ்த்த முடியுமா என்ற கேள்விக்கு “பாஜக பிரதமர் மோடியை தேசிய அளவில் முன்னிலைப்படுத்தவில்லை. நீங்களாகவே அப்படி கற்பனை செய்து கொண்டு இப்படி ஒரு கேள்வியை எழுப்புகிறீர்கள். இன்னும் பல மாதங்கள் அவகாசம் இருக்கிறது. எனவே பொறுத்திருங்கள். கூட்டணிக்கு தேவையானது தலைமை இல்லை, இலக்கு தான். ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூகநீதி மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற இலக்கு தான் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்தி செல்கிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.