திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமையவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன்.24) அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாட்டு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையம்
சென்னையில் தொழில்துறை சார்பில் நடைபெறும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னதாகப் பங்கேற்றார். இந்த விழாவில் திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் 76.90 கோடி ரூபாயில் அமைய உள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும், சென்னை, தரமணி டைடல் பார்க்கில் 212 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான மையத்தையும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூரில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காக்களில் 33.46 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்களையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
முன்னதாக நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது,விழுப்புரம், தூத்துக்குடி, வேலூர், திருப்பூர் ஆகிய நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்திருந்தார். அதன்படி, விழுப்புரம், திருப்பூர் பகுதிகளில் மினி டைடல் பூங்கா அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, தற்போது அவற்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
தெற்கு ஆசியாவில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு
இந்நிலையில் விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "2030க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும். உற்பத்தியில் தெற்கு ஆசியாவில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தொழில்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
’எல்லோருக்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி திராவிட மாடல் ஆட்சி நடைபெறுகிறது. அறிவுசார் நகரம் திட்டம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. சூரிய மின்சக்தி, மின்னணுவியல் உள்ளிட்ட துறைகள் புதிய தொழில் வாய்ப்புள்ள துறைகளாக அறியப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்