தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக அவர் கோவை மாவட்டத்திற்கு நேரில் சென்று தனது கள ஆய்வை மேற்கொண்டார். அங்கே நலத்திட்ட பணிகளைத் தொடங்கி வைத்ததுடன் பல பகுதிகளிலும் மக்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகரில் இன்று முதலமைச்சர் ஆய்வு:


இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகர் மாவட்டத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று விமானம் மூலமாக சென்னையில் இருந்து மதுரை செல்கிறார். மதுரையில் இருந்து கார் மூலமாக விருதுநகருக்குச் செல்கிறார்.


விருதுநகர் செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விருதுநகரில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை முன்பு தி.மு.க. சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பின்னர், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிசேரி புதூர் செல்கிறார். அங்குள்ள பட்டாசு ஆலையில் பட்டாசு உற்பத்தியை நேரில் பார்வையிடுவதுடன் பட்டாசு தொழிலாளர்களை  நேரில் சந்திக்கிறார். அப்போது, அவர்களின் குறைகளை கேட்க உள்ளார்.

பிரம்மாண்ட ரோட் ஷோ:


பின்னர், சூலக்கரையில் உள்ள ஆதரவற்றோர் குழந்தைகள் இல்த்திற்கு சென்று அவர்களிடம் பேசுகிறார். மாலை 4 மணியளவில் விருதுநகர் மாவட்டம் ராமமூர்த்தி சாலையில் உள்ள கந்தசாமி மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர், அங்கிருந்து விருதுநகர் புதிய பேருந்து நிலையம் வழியாக ராம்கோ விருந்தினர் மாளிகைக்குச் செல்கிறார்.


கட்சி நிர்வாகிகளுடன் கூட்டத்தை முடித்த பிறகு விருந்தினர் மாளிகைக்குச் செல்லும் வழியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரம்மாண்டமான ரோட் ஷோ-வில் பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க சாலையின் இரு புறமும் மக்கள் திரளாக குவிய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. கே.கே.எஸ்.எஸ்.ஆர்., தங்கம் தென்னரசு ஆகிய அமைச்சர்களின் மாவட்டமான விருதுநகருக்கு முதலமைச்சர் வருவதால் வரவேற்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட ரோட் ஷோவை பிரமிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குவிக்கப்பட்ட போலீஸ்:


அதேசமயம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ரோட் ஷோ காரணமாகவும், அவரது வருகை  காரணமாகவும் விருதுநகரில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


இன்று மட்டுமின்றி நாளையும் விருதுநகரில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். நாளை விருதுநகரில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். நாளை 40 ஆயிரத்து 148 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்குகிறார். விருதுநகர் மாவட்டத்தில் நலத்திட்ட உதவிகள், மக்கள் சந்திப்பை முடித்த பிறகு நாளை மாலை மதுரை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் திரும்புகிறார்.