முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார்.


திருப்பதியில் தனது மகனின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், அங்கேயே அவர் உயிரிழந்தார். நாளை காலை அவரது உடல் கோவை கொண்டு வரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.


கோவை செல்வராஜ் உயிரிழப்பு:


கோவை செல்வராஜின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக காங்கிரஸ் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான செல்வப்பெருந்தகை வெளியிட்ட இரங்கல் செய்தியில், "முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. செய்தித் தொடர்பு குழு துணைச் செயலாளருமான கோவை செல்வராஜ் மாரடைப்பில் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.


பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு மக்கள் பணியாற்றியவர். திருப்பதியில் தனது மகன் திருமணத்திற்காக சென்றிருந்த போது இந்த சோக நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது என்பது மேலும் மிகுந்த வேதனையளிக்கிறது.


 






அவரது குடும்பத்தினர்களுக்கு இவரது இறப்பு மிகப்பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், தி.மு.கழக நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.


விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விசிகவின் பொதுச்செயலாளருமான ரவிக்குமார் வெளியிட்ட இரங்கல் செய்தியில், "திமுகவின் செய்தி தொடர்பாளரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து துயருற்றேன். அவர் அதிமுகவில் இருந்தபோது தொலைக்காட்சி விவாதங்களின்போது சிலமுறை சந்தித்திருக்கிறேன்.


கடுமையான கருத்துகளை நிகழ்ச்சியின்போது பகிர்ந்துகொண்டாலும் தனிப்பட்ட முறையில் அன்பும், மரியாதையும் ததும்பப் பேசுவார். அண்ணன் கோவை செல்வராஜ்-க்கு என் அஞ்சலி" என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.