தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாகவே அரசின் திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிம் என ஐ.ஏ.எஸ் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கூட்டத்தில், அரசுப் பள்ளி விடுதி மாணவர்கள் மற்றும் அரசு கல்லூரி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அதாவது, அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் உணவு உதவித்தொகை ரூபாய் 1000லிருந்து ரூபாய் 1400ஆக வழங்கப்படும் எனவும், கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவு உதவித்தொகை ரூபாய் 1100இல் இருந்து ரூபாய் 1500ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 


குறிப்பாக இதுகுறித்து அவர் பேசுகையில்,


முதலாவதாக, அரசுப் பள்ளி மாணவர் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவிகளுக்குத் தற்போது மாணவர் ஒருவருக்கு மாதந்தோறும் உணவுக்காக வழங்கப்பட்டு வரும் தொகை ரூபாய் ஆயிரத்திலிருந்து, ரூபாய் ஆயிரத்து நானூறாக உயர்த்தி வழங்கப்படும்.  அதேபோல், அரசுக் கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளில் தங்கிப் பயிலுவோருக்கு தற்போது மாதம் ஒன்றுக்கு வழங்கப்படும் ரூபாய் ஆயிரத்து நூறு என்பது இனி ஆயிரத்து ஐநூறு ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.  இதன் மூலம் 1,71,844 மாணவ மாணவியர் பயன்பெறுவார்கள்.  இதனால் அரசுக்கு 68 கோடியே 77 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இதனை கல்விக்காக செய்யும் ஒரு முதலீடு என்று கருதியே இந்த அரசு இதனை மேற்கொள்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.


இரண்டாவதாக, காவல் துறை அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளின்படி, கள்ளச்சாராயத் தொழிலில் ஈடுபட்டு, மறுவாழ்வு பெறுவோர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து, ரூபாய் 50 ஆயிரமாக வழங்கப்படும்.


மூன்றாவதாக, விசாரணைக் கைதிகளை நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளதால், அதனைக் களைய உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்று வீடியோ-கான்பரன்சிங் முறையினைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.


நான்காவதாக, ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் தங்கும் விடுதிகளை பழுதுநீக்கம் செய்து சீரமைக்க சிறப்புத் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படும்.


ஐந்தாவதாக, பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்புச் சாலைகள் அமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்த தேவையான அனுமதிகளை வழங்க தலைமைச் செயலாளர் தலைமையில் ஒரு வழிகாட்டுக் குழு அமைக்கப்படும்” என தெரிவித்தார்.