உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியாகும் அவசியம் குறித்து உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்த கருத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
மும்பையில் ஜனவரி 20 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்ச நீதிமன்றத்தின் அடுத்தக்கட்ட நகர்வு என்பது தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும் என்றும், இதற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி பேசியிருந்தார்.
மேலும் மக்கள் புரிந்துக்கொள்ளக்கூடிய ஒரு மொழியில் நீதிமன்றத்தின் தீர்ப்பு சென்றடையாவிட்டால் , நாங்கள் மேற்கொள்ளும் பணி 99% மக்களை சென்றடையாது. அப்படி நிகழும் போது அது நீதித்துறையின் வரலாற்றில் மிக முக்கிய மைல்கல்லாக அமையும்.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் கருத்தை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் கிடைக்கச் செய்வதன் அவசியத்தைப் பற்றி பேசினார். அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது ஒரு பாராட்டுக்குரிய சிந்தனை, இது பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உதவும் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்தியாவில் பல மொழிகள் உள்ளன, அவை நமது கலாச்சாரத்தை அதிகரிக்கின்றன. பொறியியல், மருத்துவம் போன்ற பாடங்களை மாநில மொழிகளில் படிக்கும் வாய்ப்பு உட்பட இந்திய மொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது எனவும் பிரதமர் கூறியிருந்தார்.
இந்நிலையில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியாகும் அவசியம் குறித்து பேசிய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கருத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “அனைத்து இந்திய மொழிகளிலும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். இது உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற நமது நீண்டகாலக் கோரிக்கையுடன், நமது நாட்டின் சாமானிய மக்களுக்கு நீதியை கிடைக்கச் செய்யும்” என தெரிவித்துள்ளார்.