அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவில் கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் அருகே உள்ள நெமிலி வட்டத்தில் தான் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள கீழ்வீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவுக்காக சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் கூடிய நிலையில் நேற்று மயிலேறு நிகழ்ச்சி நடைபெற்றது. 


இதன் ஒருபகுதியாக கிரேன் மூலம் அம்மனுக்கு மாலை செலுத்தும் வைபவம் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஆர்வமாக மாலை அணிவிக்கும் நிகழ்வுக்காக காத்துக் கொண்டிருக்க எதிர்பாராதவிதமாக கிரேன் சரிந்து கீழே நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது சரிந்து விபத்துக்குள்ளானது. 






இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 8க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 


காயம் அடைந்தவர்கள் புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


இதுதொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழாவின் போது விபத்து ஏற்பட்டது கிராம மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது