இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இன்று பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். காணொலி காட்சி மூலமாக இந்த பிரம்மாண்ட மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டார்.
தனது உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
கடந்த மூன்றாண்டு காலத்தில்
- 1,355 திருக்கோயில்களில் குடமுழுக்கு விழாக்கள்.
- 3 ஆயிரத்து 776 கோடி ரூபாயில் 8 ஆயிரத்து 436 திருக்கோயில்களில் திருப்பணிகள்.
- 50 கோடி ரூபாயில் கிராமப்புற ஆதிராவிடர் கோயில்களில் திருப்பணிகள் நடத்தி இருக்கிறோம்.
- 62 கோடியே 76 லட்சம் ரூபாயில் 27 திருக்கோயில்களில் இராஜகோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.
- 80 கோடியே 50 இலட்சம் ரூபாயில் பழனி இடும்பன்மலை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோயில்களில் கம்பிவட ஊர்திகள் ( ரோப்கார்) அமைக்கப்பட்டிருக்கிறது.
- 5 ஆயிரத்து 577 கோடி ரூபாய் மதிப்புடைய 6 ஆயிரத்து 140 ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டிருக்கிறது.
- 756 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. தினந்தோறும் 82 ஆயிரம் பேர் உணவு உண்டு வருகிறார்கள்.
- கோயில் சொத்துகளை அளவிடும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த மூன்றாண்டுகளில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 507 ஏக்கர் நிலங்கள் நவீன ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு; 64 ஆயிரத்து 522 கற்கள் நடப்பட்டுள்ளன.
- 4 ஆயிரத்து 189 ஏக்கர் நிலம், மீண்டும் கோயில் பெயரில் பட்டா செய்யப்பட்டிருக்கிறது.
இப்போது நான் சொன்னதெல்லாம் மிகவும் குறைவு. நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளை, இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஒரு புத்தகமாகவே போடப்பட்டிருக்கிறது. அதில் இருந்து சிலவற்றைதான் நான் இப்போது சொல்லியிருக்கேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
மேலும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு, இந்து சமய அறநிலையத் துறை வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ்நாட்டு ஆன்மீக வரலாற்றிலேயே மிகச் சிறப்பான இடத்தைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பழனி ஆண்டவர் கல்லூரியில் நடைபெற்று வரும் இந்த அனைத்துல முத்தமிழ் முருகன் மாநாட்டில் நீதியரசர்கள், மகா சன்னிதானங்கள், ஆன்மீக பெரியவர்கள், சமய சொற்பொழிவாளர்கள், தமிழ் இலக்கிய அறிஞர்கள், புலவர்கள், பேராசிரியர்கள், பேச்சாளர்கள், இசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள் என பலரும் பங்கேற்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் அறநிலையத்துறை பணிகள் பலவற்றையும் பட்டியலிட்டார். அதில் அவர் கூறியதாவது,
- பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, காந்தல் ஆகிய ஏழு முருகன் திருக்கோயில்களில் பெருந்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு வருகிற பக்தர்கள் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், பக்தர்கள் நலனை மனதில் வைத்து, கோயில் பணிகளை தொடங்கி இருக்கிறோம். வளர்ச்சித் திட்டப் பணிகளுக்காக77 ஏக்கர் நிலங்களை 58 கோடியே 54 இலட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கி கையகப்படுத்துகின்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
- அறுபடை வீடு முருகன் திருக்கோயில்களில் 789 கோடியே 85 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 251 பணிகள் நடைபெற்று வருகிறது.
- அறுபடை வீடு அல்லாத முருகன் திருக்கோயில்களில் 277 கோடியே 27 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 588 பணிகள் நடைபெற்று வருகிறது.
- 69 முருகன் திருக்கோயில்களின் திருப்பணிகளை முடித்து குடமுழுக்கு விழா நடத்தப்பட்டிருக்கிறது.
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற 4000 மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லாத காலைச் சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு மதிய உணவும் வழங்கப்பட இருக்கிறது.
- பழனி திருக்கோயிலுக்கு தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம திருவிழாக்களுக்கு பாதயாத்திரை வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பணிபுரிந்து ஓய்வு பெற்று, துறை நிலையிலான ஓய்வூதியம் வாங்குகிற 258 ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு ஓய்வூதியம் 3000 ரூபாய் என்று வழங்கப்பட்டு வந்ததை 4000 ரூபாயாக உயர்த்தியும், 54 குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நபர் ஒருவருக்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டதை 2000 ரூபாயாக உயர்த்தியும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
- 2024-ஆம் ஆண்டு அறுபடை வீடு ஆன்மீக சுற்றுப்பயணத்துக்கு 1000 பக்தர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதுநாள் வரை 813 நபர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
- அனைத்து திருக்கோயில்களிலும் பக்தர்களுக்கு கட்டணமில்லாத முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முடி காணிக்கை பணியாளர்களுக்கு மாதம் 5000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
- தவில், நாதஸ்வரக் கல்லுாரி, அர்ச்சகர் மற்றும் வேத ஆகம படிக்கின்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் பள்ளிகளில் ஊக்கத்தொகையாக 3000 ரூபாய் வழங்கப்பட்டு வந்ததை 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
- பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் தொடர்ந்து 5 ஆண்டுகள் பணிபுரிந்த 13 பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்தத் திருக்கோயிலில் பணிபுரிந்து பணிக்காலத்தில் மறைவெய்திய பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 8 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணை வழங்கப்பட்டிருக்கிறது.
- திருக்கோயில்களில் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வந்த 1,298 பணியாளர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். 111 பணியாளர்கள் கருணை அடிப்படையில் பணிநியமனம் செய்யப்பட்டிருக்கார்கள்.
- திருக்கோயில் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், ஊக்கத்தொகை உயர்வு செய்தல், தினக்கூலி மற்றும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்த 1,298 பணியாளர்களுக்கு பணிநிரந்தரம் வழங்கப்பட்டது. ஓய்வூதியதாரர்களுக்கு தொகை உயர்வும் வழங்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.