தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மாரிசெல்வராஜ். இவரது இயக்கத்தில் திருநெல்வேலியில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவானது வாழை. இந்த படத்திற்கு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவில் முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்காக சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு சான்பிரான்ஸிஸ்கோ நகரத்தில் வாழை திரைப்படத்தை பார்த்தார். 


முதலமைச்சர் வாழைக்கு பாராட்டு:


இதையடுத்து, வாழை படத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் அவர்,






"உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜூக்கு அன்பின் வாழ்த்துகள் பசியுடன் சிவனனைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜூக்கு மீண்டும் வாழ்த்துகள்"


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 


2030ம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1 ட்ரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி உயர்த்த வேண்டும் எனும் இலக்கை கொண்டு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், அதிகாரிகளைச் சந்தித்து வருகிறார். இதுவரை சுமார் 1200 கோடிக்கும் அதிகமாக முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தற்போது சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள முதலமைச்சர், இன்று சிகாகோ செல்கிறார்.

வாழை படத்தில் ராகுல், பொன்வேல் என்ற சிறுவர்களுடன் கலையரசன், திவ்யா துரைராஜ், நிகிலா விமல், ஜானகி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மிகவும் யதார்த்தமாக நெல்லை மண்ணில் நடக்கும் கதைக்களமான இந்த படம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிக்கும் வகையில் அமைந்துள்ளது.