ennore oil spil: எண்ணூரில் கடற்பரப்பில் எண்ணெய் கசிந்த விவகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கத்தின் கேள்விகளுக்கு தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பதிலளித்துள்ளார்.


தலைமை செயலாளர் விளக்கம்:


தனியார் நிறுவனத்திலிருந்து வெளியேறிய எண்ணெய் எண்ணூரில் கடற்பரப்பில் கலந்த விவரகாரம் தொடர்பாக, அறப்போர் இயக்கம் காணொலி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் பல்வேறு குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு தலைம செயலாலர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்துள்ளார்.


இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “இந்நிகழ்வு 07.12.2023 அன்று சென்னை மாவட்டத்தில் ஒரு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. கழிவுகளை அகற்றும் பணி 11.12.2023 அன்று தொடங்கப்பட்டுள்ளது. எண்ணெய் கழிவுகள் பரவுவதை தடுக்க (Boomer) தடுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதுவரையிலும், திருவள்ளூர் மாவட்ட வரம்பிலுள்ள நீர்நிலைகளில் எண்ணெய் கழிவுகள் படரவில்லை. 12.12.2023 அன்று திருவள்ளூர் மாவட்ட நீர்நிலை பகுதியிலிருந்து நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ளது” என தலைமை செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.






பிரச்சனை என்ன?


கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதற்கான நிவாரணப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் சொசஸ்தலை ஆற்றில் எண்ணெய் கழிவு மிதந்து வருகிறது.


அப்பகுதியில் இருக்கும் மீனவர்களின் படகுகளில் கரிய பிசின் போல் இந்த எண்ணெய் ஒட்டியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மீன்களின் இனப்பெருக்கமும் கடுமையாக பாதிக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர். 


பசுமை தீர்ப்பாயம் அதிரடி:


இந்த விவகாரம் தொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தானாக முன் வந்து வழக்கு பதிவு செய்தது. விசாரணையின் போது, “மணலி தொழிற்பேட்டை சுற்றியுள்ள பகுதிகள், நெடுஞ்சாலைகள், குடியிருப்புகள் முழுவதும் எண்ணெய் கழிவுகளைக் காண முடிகிறது. "Traces of Oil" என்றால் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் நீர்வளத்துறை அறிக்கை 5 கிலோமீட்டருக்கு பெரும் அளவில் எண்ணெய் கழிவுகள் காணப்பட்டதாக தெரிவிக்கிறது. இதை எப்படி Trace of  Oil என மாசு கட்டுப்பாடு வாரியம் கூற முடியும்” என மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.


”ஆதாரங்கள் கைவசம் உள்ளன”


இதைதொடர்ந்து, இரண்டு தினங்களுக்கு முன்பாக தலைமை செயலாளர் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. எண்ணெய் அகற்றும் பணிகள நடைபெற்று வருவதாகவும், மக்களுக்கு தேவையான நிவாரணமும் வழங்கப்பட்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த வழக்கு மிண்டும் விசாரணைக்கு வந்தபோது பேசிய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய வழக்கறிஞர்,  ” 9 ஆம் தேதி CPCL ஆலையிலிருந்து வடிகால் வழியாக வெளியேறிய எண்ணெய் பக்கிங்காம் கால்வாய் முதல் கழிமுகம் வரையிலான 11 கிமீ தூரத்திற்கு எண்ணெய் பரவியிருந்தது. CPCL ஆலை அதிகப்படியான எண்ணெயை தேக்கி வைத்ததும், மழைநீர் தேக்கி வைக்கும் குளம் போதுமனதாக இல்லாததும் முறையாக பராமரிக்காததுமே எண்ணெய் கசிவுக்குக் காரணம் என்பதற்கான எல்லா ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன” என குறிப்பிட்டார்.