முதலமைச்சரின் தனிச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தவர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ். சிவ்தாஸ் மீனா விருப்ப ஓய்வில் செல்ல இருப்பதாலும், அவர் ரியல் எஸ்டேட் ஆணையராக நியமிக்கப்பட்டிருப்பதாலும் தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் நேற்று நியமிக்கப்பட்டார்.
முதலமைச்சரின் தனிச்செயலாளராக உமாநாத் நியமனம்:
இதையடுத்து, முதலமைச்சரின் புதிய தனிச்செயலாளராக உமாநாத் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதன்மை தனிச்செயலாளராக இருப்பார். இவருக்கு அடுத்தபடியாக முதன்மைச் செயலாளராக சண்முகம் ஐ.ஏ.எஸ். நியமிக்கப்பட்டுள்ளார். மற்றொரு தனிச்செயலாளராக அனு ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவர்கள் 3 பேரும் ஏற்கனவே முதலமைச்சரின் தனிச்செயலாளராக பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு கடந்த சில வாரங்களாக முக்கிய உயர் அதிகாரிகள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. இந்த சூழலில், தலைமைச் செயலாளராக முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளதால் முதலமைச்சருக்கான தனிச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
யார் இந்த உமாநாத்?
இதில், முதன்மைத் தனிச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள உமாநாத் பல்வேறு முக்கிய பொறுப்புகளை தமிழ்நாட்டில் வகித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த உமாநாத் 2010ம் ஆண்டு கோவை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்துள்ளார். இவர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்தபோது, 30 ஆண்டுகளுக்கு மேலாக பட்டா கேட்டு போராடிய மக்களுக்கு பட்டா வழங்கியுள்ளார். இதனால், அநத பகுதிக்கு கலெக்டர் உமாநாத் காலனி என்றே பெயர் சூட்டி அந்த பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர். கோவையில், தி.மு.க. ஆட்சியில் செம்மொழி மாநாடு நடைபெற்றபோது அங்கு மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்தவர்.
எம்.எஸ்.சண்முகம்:
உமாநாத்திற்கு பிறகு முதலமைச்சரின் தனிச்செயலாளராக(இரண்டாவது) நியமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ்., தமிழ்நாட்டில் பல துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். இவர் தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியராக பணிபுரிந்துள்ளார். எம்.எஸ்.சண்முகம் தனது மனைவிக்கு தஞ்சை அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்த்தது மக்கள் மத்தியில் தனிக்கவனத்தை பெற்றது.
யார் இந்த அனுஜார்ஜ்?
தொழில்துறை ஆணையராக பொறுப்பு வகித்துள்ள அனு ஜார்ஜ் 2011ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரை அரியலூர் ஆட்சியராக பொறுப்பு வகித்தவர். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் பெண் சிசுக்கொலையைத் தடுப்பதற்காக கடும் நடவடிக்கை எடுத்தவர். பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருந்த செட்டிக்குளம் ஏரியை தூர்வாரி நடைபயணம் செய்யக்கூடிய பூங்காவாக மாற்றியும் அசத்தியுள்ளார். கருணாநிதியின் இறுதி அஞ்சலிக்கான பணிகளை மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதாவுடன் இணைந்து நேரடியாக கவனித்துக் கொண்டவர் இந்த அனு ஜார்ஜ் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் முதலமைச்சரின் தனிச்செயலாளர்களில் ( 3வது) ஒருவராக உள்ளார்.