மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசில் மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்த அவருக்கு, சிறையில் அடைக்கப்பட்டு 471 நாட்களுக்கு பிறகு இன்று உச்சநீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.


ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி:


இந்த நிலையில், பிணையில் இருந்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜிக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.






தியாகமும், உறுதியும் பெரிது:


எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன். உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!"


இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். 


அ.தி.மு.க.வில் அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி பின்னர் தி.மு.க.வில் இணைந்தார். தி,மு.க.வில் இணைந்த அவர் கரூர் வட்டாரத்தில் தி.மு.க.வின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார். மு.க.ஸ்டாலினின் தலைமையிலான அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 


இந்த நிலையில், செந்தில் பாலாஜி பிணையில் வெளியாக இருப்பதை அவரது ஆதரவாளர்களும், தி.மு.க. தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர். பிணையில் வெளியில் வர உள்ள செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படுமா? அவர் எப்போது அமைச்சர் ஆவார்? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் எழுந்துள்ளது. 


சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ள நிலையில், செந்தில் பாலாஜி பிணையில் வெளியில் வந்திருப்பது தி.மு.க.விற்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.