தெலங்கானா மாநிலம் உருவாவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் சந்திரசேகர் ராவ். அந்த மாநிலம் உருவாகியது முதல் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி செய்தவர். கடந்த சட்டமன்ற தேர்தலில் சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. மேலும், கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவும் தோல்வி அடைந்தார்.


சென்னை வந்த பி.ஆர்.எஸ். நிர்வாகிகள்:


அடுத்தடுத்து கட்சி சந்தித்த தோல்விகள் காரணமாக கட்சியை வலுப்படுத்த பி.ஆர்.எஸ். தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த சூழலில், அண்டை மாநிலமான தமிழ்நாட்டிற்கு பி.ஆர்.எஸ். கட்சியின் நிர்வாகிகளை அனுப்பி திராவிட கொள்கைகளை பின்பற்றி தி.மு.க. எவ்வாறு ஆட்சி செய்கிறது என்பதை அறிந்து அதை தங்கள் மாநிலத்திலும் செயல்படுத்த பி.ஆர்.எஸ். முடிவு செய்துள்ளது.


இதற்காக பி.ஆர்.எஸ். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் நேற்று சென்னை வந்துள்ளனர். சென்னைக்கு வந்துள்ள அவர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு, இட ஒதுக்கீடு, தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்கான நடவடிக்கை, தொழில் நிறுவனங்களின் மேம்பாட்டு உத்திகள் போன்ற முக்கிய விஷயங்களை நேரில் சென்று அறிந்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த பயணத்தின் மூலம் தமிழ்நாட்டின் ஆட்சி முறைகளையும் அறிந்து கொள்ள அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.






மு.க.ஸ்டாலினுக்கு நன்றி:

இந்த பயணத்திற்கு பிறகு தெலங்கானாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, சமூக நீதி மற்றும் சமமான நிர்வாகத்திற்கான எங்கள் உறுதிப்பாட்டை வலுப்படுத்த முயற்சிப்போம் என்றும் பி.ஆர்.எஸ். நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


மேலும், தெலங்கானாவில் இருந்து சென்னை வந்துள்ள பி.ஆர்.எஸ். கட்சி நிர்வாகிகள் இந்த சுற்றுப்பயணத்திற்கு உறுதுணையாக உள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.   


தெலங்கானாவில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் இரண்டிலும் படுதோல்வி அடைந்துள்ள பி.ஆர்.எஸ். கட்சி மீண்டும் தங்கள் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே தற்போது திராவிட கொள்கைகளை பற்றி அறிந்து கொள்ள 13 பேர் கொண்ட கட்சி நிர்வாகிகள் அனுப்பப்பட்டுள்ளனர்.