வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகேயுள்ள நேற்று முன்தினம் (டிசம்பர் 5) பாபட்லா என்னும் இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி இரவு வரை 24 மணி நேரத்துக்கும் மேலாக 4 மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. 


இதில் சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் உணவு, இருப்பிடம் இன்றி மக்கள் பலரும் அவதிப்பட்டனர். குறிப்பாக வீட்டை விட்டு கூட வெளியேற முடியாமல் முடங்கிய மக்களை மீட்பு படையினர் மீட்டு நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர். மின்சாரமும் நிறுத்தப்பட்டது. இதன்பின்னர் வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். வெள்ளநீர் வடிய தொடங்கிய இடங்களில் படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இப்படியான நிலையில் கடந்த 2 தினங்களாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ளம் பாதித்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். 


மேலும் அனைத்து இடங்களிலும் அமைச்சர்களும், அதிகாரிகளும் நேரில் களமிறங்கி நிவாரண பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் ஆய்வு மேற்கொண்டது பற்றி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றையும் வெளியிட்டார். அதில்,  “கொளத்தூர், திரு. வி.க.நகர் மற்றும் எழும்பூர் தொகுதிகளில் #CycloneMichaung பெருமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டேன்.


வெள்ளநீர் தேங்கியிருக்கும் நிலையில், மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும்தான் சில இடங்களில் மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை.






மின் இணைப்புகள் வழங்கும் பணிகள் கவனத்தோடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


அமைச்சர்கள், அதிகாரிகள் முதல் கடைநிலைப் பணியாளர்கள் வரை மக்களைப் பாதுகாக்கக் களத்தில் ஓய்வின்றி உழைத்து வருகிறார்கள். விரைவில் நிலைமை சீரடையும்” எனத் தெரிவித்துள்ளார்.