TN GOVT: நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து தமிழ்நாடு அரசு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வருமானவரி செலுத்தும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 


இதுதொடர்பான அறிவிப்பில், “தாய்ட்டிற்காக நம் நாட்டின் எல்லைகளில், பல்வேறு கடினமான குழல்களில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்திடும் நோக்குடன் தன்னலமற்ற சேவைகள் செய்துவரும் நமது முன்னாள் படைவீரர்களின் நலனிற்காக இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வீட்டுவரித் தொகையினை மீளப்பெறும் சலுகை, தற்போது கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற படைவீரர் போன்ற சில பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வரும் நிதியாண்டிலிருந்து குடியிருப்புகள், சொத்துவரி, வீட்டுவரித் தொகையினை மீளப்பெறும் இத்திட்டத்தினை அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் நீட்டிப்பு செய்து வழங்கிட ஆவன செய்யப்படும். இதனால் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் பயன் பெறுவர்” என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.