”தமிழ் வெறும் மொழியல்ல, அது நம்  உயிர். தமிழை ‘தமிழே’ என்று அழைப்பதில் உள்ள சுகம் வேறு எதிலும் இல்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரைக் கழகத்தை முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அவை பின்வருமாறு:


திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு தமிழ் பாதுகாப்புக் கழகம் தொடங்குவது என்பது முழுமுதற் கடமை. திமுக என்று சொல்வதை திரையுலகில் பரப்பியபோது ஒரு பாடல் பிரபலமடைந்தது. அந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். பாடி முடித்தவர் கலைவாணர்.


திருக்குறள் முன்னேற்றக் கழகம்!


திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்த நான்கே ஆண்டுகளில் அந்தப் பாடல் வந்தது. தொண்டர்களுடைய உணர்ச்சியை தட்டி எழுப்பியது மட்டுமல்ல, திமுக என்றால் என்ன என்று சொன்னது அந்தப் பாடல்.


”தினா, முனா, க னா... எங்கள் திருக்குறள் முன்னேற்றக் கழகம், அறிவினைப் பெருக்கிடும் பகுத்தறிவோடு நாட்டினர் வாழ திருக்குறள் தந்தார் வள்ளுவப் பெரியார்! அந்தப் பாதையிலே நாடு சென்றிடவே வழிவகுப்பதையும், அதன்படி தினா, முனா, கனா... திருக்குறள் முன்னேற்றக் கழகம்” என்று கலைவாணர்  பாடினார்.


அதாவது திமுக என்றாலே தமிழ், தமிழ் என்றாலே திமுக என வளர்க்கப்பட்டது தான் இந்த இயக்கம். ஆட்சிக்கு வந்தபோது தாய் தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது.


’தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய அண்ணா’


இந்த மாநிலத்துக்கு சென்னை ராஜதானி, சென்னை மாகாணம் என்று பெயர். அதனை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்டியவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அத்தகைய அண்ணாவின் பெயரால் அமைந்துள்ள இந்தப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பரப்புரைக் கழகத்தைத் தொடங்குவது பொருத்தமானது. மிக மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது.


அனைவருக்குமான வளர்ச்சி. அனைத்து துறை வளர்ச்சி. அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து சமூக வளர்ச்சி என்பதை உள்ளடக்கமாகக் கொண்ட திராவிட மாடல் ஆட்சியை நாம் நடத்தி வருகிறோம். அந்த வகையில், தகவல் தொழில்நுட்பவியல் துறை வளர்ச்சி அடைந்து வருகின்றது. தமிழ்நாட்டில் தகவல்தொழில்நுட்பவியலுக்கு அடித்தளம் அமைத்தது கழக அரசுதான்.


தகவல் தொழில்நுட்பவியலுக்கு அடித்தளம்


இதற்கு கம்பீரமான சாட்சியாக நிற்கிறது டைடல் பார்க். முதலமைச்சராக கலைஞர் இருந்தபோது தொடங்கிய தொழில்நுட்ப புரட்சிதான் கடந்த 27 ஆண்டுகளில் அத்துறை மகத்தான வளர்ச்சி அடைந்ததற்கு காரணம்.


உலகம் முழுக்க தமிழ்நாட்டு இளைஞர்கள் பணியாற்றுகிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டது கலைஞர்.  அதனுடைய அடுத்த கட்டம் தான் கணினிமயமாக்குதல்.


நம்முடைய அறிவுச் சொத்துகள் அனைத்தையும் முழுமையாக அறிவியல் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் மாற்றி சேமித்து வைக்கக்கூடிய மகத்தான பணியை தமிழ் இணைய கல்விக்கழகம் செய்து வருகிறது.


அழிந்து போன தமிழ் சொத்துகள்...


1999ஆம் ஆண்டு ’தமிழ் நெட் 99’ என்ற தமிழ் இணைய வழி மாநாட்டின் மூலம் இணைய தமிழ் தொடர்பான முன்னெடுப்புகளையும், தமிழியல் கல்விக் கழக தோற்றத்தையும் முதலமைச்சர் கலைஞர் அறிவித்தார்.


அதன்பின், 05.07.2000 அன்று தமிழ் இணைய கல்விக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பல நூறு ஆண்டுகளாக தமிழின் சொத்துகள் சேகரித்து வைக்கப்படாமல் அழிந்து போய் விட்டன. அந்தத் தவறு தடுக்கப்பட்டு இன்று தொகுத்தும் சேகரித்தும் தொழில்நுட்ப அடிப்படையில் மாற்றி அமைத்திருக்கிறோம்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


தமிழ் பரப்புரை கழகம் திட்டத்தை செயல்படுத்த, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் ரூ.1கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


தமிழை வளர்க்கத் தொடங்கப்படும் தமிழ்ப்‌ பரப்புரைக் கழகம் என்ன செய்து வருகிறது? பார்க்கலாம்.  


* தமிழை எளிமையாகக்‌ கற்பதற்கான தமிழ்ப்‌ பாடநூல்கள் உருவாக்கம்‌. 


* வெளிநாடுகள்‌ மற்றும்‌ வெளி மாநிலங்களில்‌ தமிழைக்‌ கற்பிக்கும்‌ அமைப்புகளுக்கு நிதியுதவி வழங்குதல்‌,


* தமிழைத்‌ திறம்பட கற்பிக்க ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்குதல்‌,


* புலம்பெயர்ந்த தமிழர்கள்‌ மற்றும்‌ அயல்நாட்டில்‌ வசிக்கும்‌ தமிழர்களுக்கு ஐந்து நிலைகள் மூலம் புதிய பாடத்திட்ட அடிப்படையில்‌ புத்தகங்கள்‌ உருவாக்கம், 


* புத்தகத்தை 24 மொழிகளில்‌ மொழிபெயர்த்து வழங்குதல்‌, 


* செயல் வழிக்‌ கற்றல்‌ என்ற அடிப்படையில்‌ கற்பித்தல்‌ துணைக் கருவிகளை உருவாக்கி, அதனை இணையம்‌ வழியாக வழங்குதல்‌, 


* ஒளி - ஒலிப்‌ புத்தகமாக வடிவமைத்தல்‌, 


* அசைவூட்டும்‌ காணொலிகளை வழங்குதல்‌,


* சொற்களஞ்சியத்தைப்‌ பெருக்கும்‌ விதமாக மின்‌ அட்டைகள்‌ வழங்குதல்‌, 


* இணையம்‌ வழியாகக் கற்றல்‌ பயிற்சியை வழங்குதல்‌, 


* கற்றறிந்த ஆசிரியர்களைக்‌ கொண்டு இணைய வகுப்புகள்‌ எடுத்தல்‌, 


* தேவைகளுக்கேற்ப ஆசிரியர்கள்‌/கலைப்‌ பயிற்றுநர்களை அயல்நாட்டுக்கு அனுப்புதல்‌,


* மொழித்திறனை வளர்க்கும்‌ பயிற்சிகள்‌, தேர்வுகள்‌ முதலானவற்றை மேற்கொள்ள கற்றல்‌ மேலாண்மை அமைப்பு (Learning Management System) செயலி உருவாக்கம்,


தமிழ் மொழியை அயலகத்‌ தமிழர்களுக்கு இணைய வழியில்‌ கற்றுக்‌ கொடுக்க 100 ஆசிரியர்கள்‌ தேர்வு‌ ஆகிய பணிகளை தமிழ்ப்‌ பரப்புரைக் கழகம் மேற்கொண்டுள்ளது.


தமிழ்ப்‌ பரப்புரைக் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?


* அயல்நாடுகளில்‌ உள்ள தன்னார்வலர்கள்‌ முறையாகத்‌ தமிழைக்‌ கற்பிக்க அவர்களுக்கு ஆசிரியர்‌ பட்டயப்‌ பயிற்சி.


* காணொலி வடிவில் சிலம்பாட்டத்தின்‌ அடிப்படைப்‌ பயிற்சிகள்‌.


* நிகழ்த்து‌ கலைகளைப்‌ பயிற்சிக்‌ காணொலிகளாக வழங்குவதற்கான முன்னெடுப்பு.


* தேவாரம், திருவாசகப் பாடல்களை ஓதுவார்களால்‌ இசை நயத்துடன்‌ பாடச்‌ செய்து, வரலாற்றுத்‌ தலங்களின்‌ சிறப்பைக்‌ காட்சிப்படுத்தும்‌ காணொலிகள்‌ உருவாக்கம் ஆகிய பணிகளை தமிழ்ப்‌ பரப்புரைக் கழகம் செய்ய உள்ளது.