ஒரு நாட்டை திறம்பட ஆட்சி செய்ய வேண்டும் என்றால், அரசன் மனம் போன போக்கில் செயல்பட முடியாது. மக்கள் மனம் அறிந்து அவர்களை அரவணைத்து செயல்படும் அரசன் தான் வரலாற்றில் நிலைத்து நிற்பான். அதைத்தான் திருவள்ளுவரும் குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன் அடிதழீஇ நிற்கும் உலகு என்ற குறளின் மூலம் உணர்த்தியிருக்கிறார். மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களிடமிருந்து கற்றுக்கொள்; அவர்கள் தருவதைப் பெற்றுக்கொள்; அவர்களை மேம்படுத்து என்றார் அண்ணா. இதை சொன்னதோடு மட்டுமல்லாமல், அதைப்போலவே வாழ்ந்து காட்டியதால் தான் அண்ணாவின் பின்னால் கோடிக்கணக்கானோர் அணிவகுத்தனர். திராவிட இயக்கத்தின் அடிப்படையே மக்களிடம் செல்வதும்; அவர்களோடு வாழ்வதும் தான். இதை அண்ணா, அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் கருணாநிதி, அவருக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் என்று பின்பற்றியதால் தான் இவர்கள் எப்பொழுதும் மக்கள் மனதில் நிலைத்திருக்கிறார்கள்.




தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவியேற்றதும் காஞ்சிபுரம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களிடம் செல், மக்களோடு மக்களாக சேர்ந்து வாழ், மக்களுக்கு பணியாற்று என்ற அறிவுரையை எப்போதும் அறிஞர் அண்ணா வழங்குவார். அண்ணாவின் அறிவுரைப்படி ஆட்சியை நடத்துவோம். அண்ணா வழியில் திமுக ஆட்சி வெற்றி நடைபோடும் என்று கூறியிருந்தார். சொன்னது மட்டுமில்லை அதை செயல்படுத்திக்கொண்டும் இருக்கிறார். இப்போதென்று இல்லை. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி. மக்கள் பணி என்று வந்துவிட்டால் தெருவில் இறங்கி நடக்கக் கூட ஸ்டாலின் தயங்கியதில்லை. கடந்த 2015 மழை வெள்ளத்தை உதாரணமாகச் சொல்லலாம். கொட்டித்தீர்த்த கனமழையால் தத்தளித்தது சென்னை. ஆட்சியில் இருந்தவர்கள் வீட்டு கதவு திறக்கப்படாத நிலையில், கோபாலபுரத்து கதவு மட்டும் திறந்தே இருந்தது. நிவாரணப்பணிகளை முன்னின்று செய்தது திமுக. வயது முதிர்ந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார் கலைஞர் கருணாநிதி. ஜெயலலிதாவை அதிகாரிகளால், ஏன் அமைச்சர்களால் கூட அனுக முடியவில்லை. அதன் விளைவு தான் 2015 பெருவெள்ளத்தில் சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது என்று கூறியிருக்கிறது சி.ஏ.ஜி அறிக்கை.


தமிழ்நாடு இந்தியாவின் ஒரு அங்கம் தான். ஆனால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை என்னால் இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை இப்படிச் சொன்னவர் வேறு யாரும் இல்லை மத்திய அமைச்சராக இருந்த பியூஷ் கோயல் தான். இப்படியாக மத்திய அமைச்சராலேயே அனுக முடியாத முதலமைச்சர் இருந்த மாநிலத்தில் தான், மனிதநேயம் பற்றி பேசிய சிறுவனும், பெரியார் போல நடித்த குழந்தைகளும் நேரில் சந்திக்க முடிகிறதென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் எந்த அளவிற்கு இயல்பானவராக இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். பேருந்தில் ஏறி குறைகளைக் கேட்பது, செல்லும் வழியில் யாரேனும் கைகாட்டினாலே காரை நிறுத்தி விசாரிப்பது, உதவி மையத்திற்கு அழைத்த நபருக்கு தானே பதிலளித்து உதவிகளை ஏற்பாடு செய்வது, பேரிடர் காலங்களில் நேரம் காலம் பார்க்காமல் உழைப்பது, காயம்பட்ட சிறுவனுக்கு தொலைபேசியில் ஆறுதல் சொல்வது, ஒடுக்குமுறைக்கு உள்ளான நெறிக்குறவர் சமூக பெண்ணின் வீட்டிற்கே செல்வது,  பணிகள் ஒழுங்காக நடக்கிறதா என்று இரவிலும் ஆய்வு செய்வது, மாஸ்க் அணியாதவர்களுக்கு காரைவிட்டு இறங்கி தானே பொதுமக்களுக்கு வழங்கியது, அரசின் நலத்திட்டங்களை தானே முன்னின்று தொடங்கி வைப்பது என்று மக்களில் ஒருவராகவே இருந்து செயல்படுகிறார் ஸ்டாலின்.




இன்றைய தேதிக்கு ஸ்டாலினைத்தவிர எளிதாக அனுக முடிந்த ஒரு தலைவர் யாரும் கிடையாது என்றே சொல்லாலாம். அதனால் தான் வெளி மாநிலத்தவர்களால் கூட முதலமைச்சரை அணுக முடிகிறது. பதாகையுடன் நின்ற ஆந்திர இளைஞரிடம், காரை விட்டு இறங்கி விசாரித்ததாகட்டும், சென்னை ஐஐடியில் தற்கொலை செய்துகொண்ட கேரள மாணவியின் தந்தையை சந்தித்தாகட்டும் தான் ஒரு முதலமைச்சர் என்ற எந்த கர்வமும் இல்லாமல் நடந்துகொள்ளும் அந்த பண்பு தான் அவரை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.  ஸ்டாலினைப்போல ஒரு தலைவர் வேண்டும் என்று அண்டை மாநில மக்களை விரும்ப வைத்திருக்கிறது.



நான் செய்தேன்; எனது தலைமையிலான ஆட்சி என்று சொன்ன தலைவர்களுக்கு மத்தியில் நமது ஆட்சி, நமது அரசு என்று பேசும் அந்த தலைமைப் பண்பு தான் கட்சித் தொண்டர்களையும் ஓயாது உழைக்க வைக்கிறது. அது தான் அவருக்கு வெற்றிமேல் வெற்றியை தேடித்தருகிறது. திருக்குறளில் ஆரம்பித்த இத்தொகுப்பை திருக்குறளாலேயே முடிப்பது பொருத்தமாக இருக்கும்.


குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு.


அதாவது, குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனைத் தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள் என்கிறார் திருவள்ளுவர். இந்த குறள் யாருக்குப் பொருந்துமோ பொருந்தாதோ. முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு நிச்சயம் பொருந்தும்.