2021ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்று, முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அன்றே தலைமைச் செயலாளராக இருந்த ராஜீவ்ரஞ்சன் மாற்றப்பட்டு, வெ.இறையன்பு புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகள் இவர் பணியாற்றிய நிலையில், இன்று அவர் ஓய்வுபெற்றார்.  இதனை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக சிவ் தாஸ் மீனா பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இவர், நகராட்சி நிர்வாகத் துறை செயலாளராக இருந்தார்.


இதனை அடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பணி ஓய்வு பெற்ற இறையன்புவுக்கு சால்வை அணிவித்து, பாராட்டு கடிதத்தையும் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.


முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்


இதனை தொடர்ந்து, இறையன்புவுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அதில், ”அன்பும் பண்பும் நிறைந்த சகோதார் இறையன்புக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பணிஓய்வு பெற்றுச் செல்லும் இன்றைய தினம் என்பது தங்களது நிர்வாகப் பணிகளுக்கான ஓய்வே தவிர, சமூக, இலக்கியப் பணிகளுக்கான ஓய்வல்ல என்பதைத் தாங்களும் அறிவீர்கள். அந்த வகையில் எதிர்வரும் காலத்திலும் தங்களது சமூக இலக்கிய ஆய்வுப் பணிகளைத் தொய்வின்றித் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.


மிக நெருக்கடியான கோவிட் பெருந்தொற்று காலக்கட்டத்தில் கழக ஆட்சி அமைந்தபோது, நிர்வாகத் துறையில் தலையைப் பொறுப்பான தலைமைச் செயலாளர் பொறுப்பைத் தாங்கள் மனமுவந்து ஏற்றுக் கொண்டு வேகமாகவும் விவேகமாகவும் செயல்பட்டீர்கள். கடந்த இரண்டு ஆண்டு அரசின் அனைத்து முன்னெடுப்புகளையும் முடுக்கிவிட்டு, தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக ஆக்குவதற்கு தங்களது சிந்தனை, செயல் ஆகிய இரண்டையும் பயன்படுத்தினீர்கள்.


"காலம் காலமாக நினைவுகூரும் பணி”


குறிப்பாக, சென்னை வெள்ள நிவாரணப் பணிகளின்போதும், உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியினை அனைத்துத் தரப்பினரும் பாராட்டும் வண்ணம் நடத்தி முடித்திடவும் தங்களின் பங்களிப்பு மகத்தானது. மேலும், விடுமுறை தினங்களிலும் தங்கள் கள ஆய்வுகளை மேற்கொண்டு, அலுவலர்களை வழிநடத்திய விதம் போற்றுதற்குரியது. இன்றைக்கு இந்தியாவே தலைநிமிர்ந்து பார்க்கும் மாநிலமாக தமிழ்நாடு விளங்க, தங்களது வழிகாட்டுதல்களும், நிர்வாகத் திறமையும், துறை ஒருங்கிணைப்பும் மிகமிக முக்கியான அடித்தளமாக அமைந்திருந்தது.


தங்களது இரண்டு ஆண்டும் பணி என்பது தமிழ்நாட்டுக்கு காலம் காலமாக நினைவுகூரும் பணியாக அமைந்திருந்தது. இதற்கு தமிழ்நாடு அரசும், குறிப்பாக தனிப்பட்ட முறையில் நானும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இனிவரும் எதிர்கால இளைய தலைமுறை அனைவர்களுக்கும் நீங்கள் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்துள்ளிர்கள். பல்துறை ஆற்றல் கொண்ட தாங்கள், தொடர்ந்து இந்த மாநிலத்துக்கும் மனித குல மேம்பாட்டுக்கும் அருந்தொண்டாற்றி வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.